கோவையில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய பாஜக பிரமுகர் உள்பட இருவர் கைது... 3.2 கிலோ கஞ்சா பறிமுதல்!

 
cbe bjp

கோவை பேரூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய பாஜக பிரமுகர் உள்ளிட்ட இருவரை கைதுசெய்த போலீசார், அவர்களிடம் இருந்து 3.2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

கோவை பேரூர் - கோவைப்புதூர் சாலையில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்களை போலீசார் நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த தனிப்படை போலீசார் அவர்களிடம் சோதனையிட்டனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் கஞ்சாவை மறைத்து கடத்திச்சென்றது தெரியவந்தது.  இதனை தொடர்ந்து, அவர்களிடம் இருந்து 3.2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், பின்னர் இருவரையும் பேரூர் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். 

arrest

அப்போது, பிடிபட்ட நபர்கள் பேரூர் செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த வேலுசாமி(43) மற்றும் வடவள்ளியை சேர்ந்த விக்னேஷ் என்பது தெரியவந்தது. மேலும், வேலுச்சாமி, முன்னாள் பாஜக சேவா அணி மாவட்ட பொதுச்செயலாளர் என்பதும், உள்ளூரில் கஞ்சா விற்பனை செய்வதற்காக எடுத்துச் சென்றதும் தெரியவந்தது. இதனை அடுத்து, பேரூர் போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.  மேலும், அவர்களிடம் இருந்து 3.2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, கைதான இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.