ராமநாதபுரம் அருகே மின்சாரம் தாக்கி பெண் உள்பட இருவர் பலி!

 
dead body

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே நேற்றிரவு மின்சாரம் தாக்கி பெண் உள்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள மல்லனூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆனிமுத்து. இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கவிதா (38). இத்தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், நேற்று இரவு திருவாடானை சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. இதனால் கவிதா, தனது வீட்டில் உள்ள மாடுகள் மழையில் நினையாமல் இருப்பதற்காக, அவற்றை கொட்டகையில் கட்டுவதற்காக சென்றுள்ளார். அப்போது, கொட்டகையில் உள்ள மின் விளக்கிற்கு சென்ற ஒயரில் மின்கசிவு ஏற்பட்டதில், கவிதாவை மின்சாரம் தாக்கியது.

thiruvadanai

இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் வசிக்கும் கருப்பையா(46) என்பவர் கவிதாவை காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது, அவர் மீது மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து, கிராமத்தினர் மின் இணைப்பை துண்டித்து இது குறித்து திருவாடானை போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மின்சாரம் தாக்கி பெண் உள்பட இருவர் உயிரிழந்த சம்பவம் மல்லனூர் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.