கிருஷ்ணகிரி அருகே கிணற்றில் மூழ்கி சிறுவன் உள்பட இருவர் பலி!

 
drowned

கிருஷ்ணகிரி அருகே கிணற்றில் நீச்சல் பழகியபோது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி பள்ளி மாணவர் உள்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஆலமரத்துபட்டி பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி. விவசாயி. இவரது மகன் ஹரிஹரன்(10). இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் 5ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், பொங்கல் பண்டிகைக்காக சின்னசாமியின் சகோதரி மகனான தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தை சேர்ந்த டிப்ளமோ மாணவர் திருப்பதி என்பவர், அவரது வீட்டிற்கு வந்திருந்தார். இந்த நிலையில் நேற்று சிறுவன் ஹரிஹரன் மற்றும் அவரது உறவினர் திருப்பதி ஆகியோர், அந்த பகுதியில் தங்களுக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் உள்ள கிணற்றுக்கு நீச்சல் பழகுவதற்காக சென்றுள்ளனர்.

krishnagiri

அங்கு கிணற்றில் இறங்கி நீச்சல் பழகியபோது எதிர்பாராத விதமாக ஹரிஹரன் மற்றும் திருப்பதி ஆகியோர் தண்ணீரில் மூழ்கினர். இதனால் அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் கிணற்றில் இறங்கி தேடினர். அப்போது இருவரும் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். தகவல் அறிந்த கிருஷ்ணகிரி தாலுகா காவல் நிலைய போலீசார், இருவரது உடல்க்ளையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிணற்றில் மூழ்கி 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.