குன்னூரில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க ரூ.90 கோடியில் 2 புதிய தடுப்பணைகள் - வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்

 
nilgiris

குன்னூர் பகுதி மக்களின் நீண்டகால குடிநீர் பிரச்சினையை தீர்க்க ரூ.90 கோடியில் 2 புதிய தடுப்பணைகள் கட்டப்படும் என வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சி பகுதிகளில் கடந்த 10 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக அங்குள்ள ரேலியா மற்றும் பந்துமை அணைகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளன. எனினும் அணை முகப்பு பகுதியில் ஏற்பட்டுள்ள பழுது காரணமாக தண்ணீர் வெளியேறி வருகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் நகராட்சி அதிகாரிகளுடன் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ரேலியா அணையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

nilgiris

அப்போது, குன்னூர் பகுதி மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க ரேலியா அணையின் அருகே புதிதாக நீரை தேக்கி வைக்க ரூ.90 கோடியில் 2 தடுப்பு  அணைகளை கட்டவும், சேதமடைந்துள்ள ரேலியா அணையை சீர்செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார். தொடர்ந்து, உதகையில் உள்ள தொட்டபெட்டா மலை சிகரத்துக்கு செல்லும் சாலையில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக தற்போது  தொட்டபெட்டா சாலை மூடப்பட்டு உள்ளதாக  தெரிவித்தார். 

இதனால் சுற்றுலா பயணிகள் தொட்டபெட்டா மலைச்சிகரத்தை கண்டு ரசிக்கவும், அந்த பகுதியில் சுற்றுலா தொழிலை நம்பி வாழும் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நலன் கருதி ஒரு மாதத்திற்குள் தொட்டபெட்டா சாலையை ரூ.15 லட்சம்  செலவில் சரிசெய்ய அமைச்சர் உத்தரவிட்டார். இன்று முதல் நீலகிரியில் மிக கனமழை பெய்யும் என வானிலை  ஆய்வு மையம்  எச்சரிக்கை விடுத்துள்ளதால், நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னெச்சரிக்கை நடடிவக்கைகள் அனைத்தும் எடுக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.