திருமணமான 2 மாதத்தில் இளம்பெண் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலை... கோபி அருகே சோகம்

 
dead

கோபிச்செட்டிப்பாளையம் அருகே திருமணமான 2 மாதத்தில் இளம்பெண் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள கும்பிமூலை பகுதியை சேர்ந்த இந்து. இவருக்கு திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். இதனை தொடர்ந்து, ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அப்போது, அதே நிறுவனத்தில் பணிபுரிந்த கோபிச்செட்டிப்பாளையம் அடுத்த கொளப்பலூரை சேர்ந்த பிரபாகரன் (32) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, இருவரும் கடந்த மே மாதம் 30 தேதி திருமணம் செய்து கொண்டனர்.

gobi

இந்த திருமணத்தில் இந்துவின் பெற்றோருக்கு சம்மதம் இல்லை என கூறப்படுகிறது. இதனால் அவர்கள் மகளுடன் பேசாமல் இருந்து வந்துள்ளனர். இதனால் இந்து மனவேதனையுடன் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், சம்பவத்தன்று பிரபாகரன் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, இந்து திடீரென வாந்தி எடுத்ததால் அவரிடம் விசாரித்துள்ளார். அப்போது, பெற்றோர் தன்னிடம் பேசாததால் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பிரபாகரன் அவரை மீட்டு கோபிச்செட்டிப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி  இந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் சிறுவல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.