வையம்பட்டி அருகே சாலை தடுப்பு மீது கார் மோதல் - 2 பேர் பலி!

 
accident

திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே சாலை தடுப்பின் மீது கார் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர். மேலும், 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

சென்னை மதுரவாயலை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (34). இவர் தனது நண்பர்களான கொரட்டூரை சேர்ந்த காமராஜ் (39), கார்த்தி (29), ஆவடியை சேர்ந்த செல்வகுமார் (32) மற்றும் செஞ்சியை சேர்ந்த ஏழுமலை (29), கவியரசு (31), சுரேஷ் (40) ஆகியோருடன், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றிருந்தார். அங்கு பல்வேறு இடங்களை பார்வையிட்ட பின் நேற்றிரவு 7 பேரும் காரில் சென்னைக்கு திரும்பி  கொண்டிருந்தனர். காரை பாலகிருஷ்ணன் ஓட்டினார்.

vaiyambatti

நேற்று நள்ளிரவு திருச்சி மாவட்டம் வையம்பட்டி ஆசாத் ரோடு அருகே திண்டுக்கல் - திருச்சி நெடுஞ்சாலையில் சென்றபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவே உள்ள இரும்பு தடுப்பு கம்பியின் மீது மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஏழுமலை உள்ளிட்ட 6 பேரும் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வையம்பட்டி போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் வழியிலேயே ஏழுமலை உயிரிழந்தார். இதனால் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது. மற்றவர்களுக்கு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து, விபத்தில் பலியான 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த வையம்பட்டி போலீசார், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.