திண்டுக்கல் அருகே குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி... கோவில் கும்பாபிஷேகத்திற்கு சென்றபோது நேர்ந்த சோகம்!

 
drowned

திண்டுக்கல் அருகே கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு வந்த 2 சிறுவர்கள் குட்டையில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.  

திண்டுக்கல் அருகே உள்ள புதுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் வீரமணி. இவர் நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது மகன் சர்வீன்(7). நேற்று வீரமணி குடும்பத்தினர் மற்றும் அவரது உறவினரான  கோவையை சேர்ந்த தங்கமணி, அவரது மகன் லத்திஸ் வினி(8) உள்ளிட்டோர்,  திண்டுக்கல் கம்மாளபட்டியில் நடைபெற்ற கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு சென்றிருந்தனர்.

dgl gh

அப்போது, சிறுவர்கள் சர்வீன், லத்திஸ் வினி ஆகியோர் கோவிலின் அருகில் உள்ள குட்டையில், அந்த பகுதி சிறுவர்கள் நண்டி பிடிப்பதை பார்த்துக் கொண்டிருந்தனர். மற்றவர்கள் புறப்பட்டு சென்ற நிலையில், சிறுவர்கள் இருவரும் குட்டையில் இறங்கி உள்ளனர். அப்போது, எதிர்பாராத விதமாக இருவரும் தண்ணீரில் மூழ்கினார்.  நீண்ட நேரமாகியும் சிறுவர்கள் இருவரையும் காணாததால் பெற்றோர் தேடிச்சென்றபோது, இருவரும் குட்டையில் மூழ்கியது தெரிய வந்தது. இதனை அடுத்து, அந்த பகுதி மக்கள் உதவியுடன் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக  திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர் இருவரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர். இதனை கேட்டு உறவினர்கள் கதறி அழுதனர். தகவலின் பேரில் வடமதுரை போலீசார், இருவரது உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.