ஓசூரில் காரில் குட்கா கடத்திய 2 பேர் கைது; 467 கிலோ குட்கா, 48 மதுபாட்டில்கள் பறிமுதல்!

 
gutka

ஓசூர் வழியாக காரில் கடத்திய ரூ.3.30 லட்சம் மதிப்பிலான குட்காவை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக கோவையை சேர்ந்த இருவரை கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் உள்வட்ட சாலை கொத்துர் சந்திப்பு பகுதியில், நேற்று முன்தினம் டவுன் காவல் நிலைய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டர். அப்போது, காரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை கடத்திச்செல்வது தெரிய வந்தது. இதனை அடுத்து, காரில் இருந்த 467 கிலோ குட்கா புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.3.30 லட்சம் ஆகும். 

hosur

மேலும், காரில் இருந்த 48 கர்நாடக மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக காரில் இருந்த 2 நபர்களை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர்களை கோவையை சேர்ந்த மலராம்(28), தினேஷ்(24) என்பதும், அவர்கள் பெங்களுருவில் இருந்து கோவைக்கு குட்காவை கடத்திச்சென்றதும் தெரியவந்தது. இதனை அடுத்து, 2 பேர் மீதும் ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர்.