அரசு நிகழ்ச்சிகளில் புறக்கணிப்பு... தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் அதிமுக எம்எல்ஏ-க்கள் தர்ணா!

 
dharmapuri

அரசு நிகழ்ச்சிகளில் புறக்கணிக்கப்படுவதை கண்டித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிமுக எம்எல்ஏ-க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தருமபுரி மாவட்டம் அரூர் தொகுதிக்குட்பட்ட கீழானூர் கிராமத்தில் நேற்று ரூ.4.40 கோடி மதிப்பில் மேம்பாலம் அமைப்பதற்கான பூமிபூஜை நடைபெற்றது. இதில் தொகுதி எம்எல்ஏவான அதிகவை சேர்ந்த சம்பத்குமாருக்கு அழைப்பு விடுக்காமல், திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணி பூமி பூஜையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து, அதிமுகவை சேர்ந்த அரூர் எம்எல்ஏ சம்பத்குமார், பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ கோவிந்சாமி ஆகியோர், தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

dharmapuri

அப்போது, தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளிலும், அதிமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்கள் வென்று எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், திமுக ஆளும் கட்சியாக உள்ளதால் தருமபுரி மாவட்டத்தில் நடைபெறும் அரசு விழாக்களில் அதிமுக எம்எல்ஏ-க்கள் மாவட்ட நிர்வாகத்தால் புறக்கணிக்கப்படுவதாக தெரிவித்தனர். மேலும், மக்கள் பிரநிதியாக இல்லாத திமுக மாவட்ட பொறுப்பாளர்களை அழைத்து விழா நடத்துவதாகவும் குற்றம் சாட்டினர். தகவல் அறிந்து அங்கு வந்த அதிகாரிகள் தர்ணாவில் ஈடுப்பட்ட அதிமுக எம்எல்ஏக்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். 

அப்போது, காட்பாடியில் கட்டிமுடித்தும் திறக்கபடாமல் இருந்த  ரயில்வே மேம்பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்த அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்புவை போலீசார் கைது செய்தனர். அதேபோல், எம்எல்ஏவாக இல்லாத தருமபுரி திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணி மீது வழக்குப்பதிந்து கைதுசெய்ய வேண்டும் என கூறினர். அதிமுக எம்எல்ஏக்கள் போராட்டம் காரணமாக தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.