ஈரோடு மாவட்டத்தில் நீட் தேர்வு எழுதிய அரசுப்பள்ளி மாணவ-மாணவிகள் 197 பேர் தேர்ச்சி!

 
students

ஈரோடு மாவட்டத்தில் நீட் தேர்வை எழுதிய அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளில் 197 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். தேர்ச்சி சதவீதம் 31.62 ஆகும்.

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளான எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த ஜூலை 17ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியானது. தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளி மாணவ - மாணவிகள் 12 ஆயிரத்து 840 பேர் தேர்வு எழுதிய நிலையில், 4 ஆயிரத்து 447 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் 7 மையங்களில் நீட் தேர்வு நடைபெற்ற நிலையில், மாவட்டத்தில் ஈரோடு, கோபி, சத்தி, பவானி, பெருந்துறை என 5 கல்வி மாவட்டங்களில் அரசு பள்ளிகளில் படித்த 623 மாணவ - மாணவிகள் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் நீட் தேர்வினை எழுதினர். இதில் 197 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

neet

இவர்களில், 149 பேர் முதன்முறையாகவும், 48 பேர் 2-வது முறையாகவும் நீட் தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 31.62 ஆகும். இதேபோல், அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்த 41 மாணவ - மாணவிகள் நீட் தேர்வெழுதிய நிலையில்,  அவர்களில் 16 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல், தேர்ச்சி பெற்றவர்களில் 500 மதிப்பெண்ணுக்கு மேல் ஒருவர், 400-க்கு மேல் இருவர், 300-க்கும் மேல் 5 பேர், 200-க்கும் மேல் 26 பேர், 100-க்கு மேல் 138 பேர் மற்றும் 93-க்கும் மேல் 25 பேர் மதிப்பெண் பெற்றுள்ளனர்.