ஈரோடு மாவட்டத்தில் 196 இடங்களில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்!

 
fever camp

ஈரோடு மாவட்டத்தில் நேற்று 196 இடங்களில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்றதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக இன்புளுயன்சா காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு அதிகளவில் இந்த காய்ச்சல் பரவி வருகிறது. இதனை தடுக்கும் விதமாக சுகாதார துறை சார்பில், காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில், நேற்று தமிழக முழுவதும் காய்ச்சல் கண்டறியும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்து இருந்தார்.

fever camp

அதன் படி, ஈரோடு மாவட்டத்தில் கிராமப்புற பகுதிகளில் காய்ச்சல் அதிகம் கண்டறியப்பட்டு உள்ள பகுதிகளில் நடமாடும் மருத்துவக்குழுக்கள் மூலம் நேற்று சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. வட்டார அளவில் 4 கிராமங்களில் நடமாடும் மருத்துவக்குழுக்கள் சென்று முகாம் நடத்தி பரிசோதனை மேற்கொண்டனர். இந்த முகாம்களில் காய்ச்சல், சளி, இருமல் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சாதாரண காய்ச்சலுக்கு மருந்து, மாத்திரை கொடுக்கப்படும் நிலையில், தொடர் காய்ச்சல் உள்ளவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர். அங்கு, அவர்களுக்கு ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, என்ன வகையான காய்ச்சல் என கண்டறியப்படும்.

இதேபோல், பள்ளிகளுக்கு என்று தனியாக மருத்துவக்குழுக்கள் அமைக்கப்பட்டு இருந்தன. அவர்கள் மாணவர்களை பரிசோதனை செய்து அவர்களுக்கு சளி, காய்ச்சல், இருமல் உள்ளதா? என்று சோதனை மேற்கொண்டனர். இவ்வறாக ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று 196 பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்பட்டதாக சுகாதாரத் துறை தெரிவித்தனர்.