திருவண்ணாமலை நகரில் உரிய ஆவணமின்றி இயங்கிய 18 ஆட்டோக்கள் பறிமுதல்... எஸ்.பி. கார்த்திகேயன் நடவடிக்கை!

 
tvmalai

திருவண்ணாமலை பேருந்து நிலையம் பகுதியில் மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் மேற்கொண்ட திடீர் சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி செயல்பட்ட 18 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி கார்த்திகேயன், நேற்று மாலை பேருந்து நிலையம் அருகே ஆட்டோக்கள் உரிய ஆவணங்களுடன் இயக்கப்படுகிறதா? என தீடீர் ஆய்வில் ஈடுபட்டார். இந்த ஆய்வின்போது திருவண்ணாமலை டவுன் டிஎஸ்பி, வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பெரியசாமி ஆகியோர் உடனிருந்தனர். இந்த ஆய்வின்போது ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட உரிய ஆவணங்கள் இன்றியும், சீருடை அணியாமலும் இயங்கிய 18 ஆட்டோக்களை எஸ்பி கார்த்திகேயன் பறிமுதல் செய்தார்.

tvmalai

மேலும், சிறுவர்கள் ஓட்டிச்சென்ற 20 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார், அவர்களது பெற்றோரை நேரில் வரவழைத்து அறிவுரை கூறியதுடன், பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்து எச்சரித்து அனுப்பிவைத்தனர். மேலும், நகர பேருந்துகளில் படிக்கட்டுகளில் ஆபத்தான முறையில் பயணம் செய்த பள்ளி மாணவர்களை கீழே இறக்கிவிட்ட அவர், படிக்கட்டு பயணத்தால் ஏற்படும் ஆபத்தை அவர்களுக்கு  விளக்கி, அவர்கள் உரிய முறையில் பேருந்தில் பயணம் செய்வதை உறுதி செய்தார்.