கொடுமுடி அருகே சரக்கு வாகனத்தில் கடத்திய 1,700 கிலோ ரேஷன்அரிசி பறிமுதல்!

 
ration rice

கொடுமுடி பகுதியில் சரக்கு வாகனத்தில் கடத்திச்சென்ற 1,700 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகின்றனர். 

ஈரோடு மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு எஸ்.பி., பாலாஜி உத்தரவின் பேரில், உதவி ஆய்வாளர் சக்திவேல் தலைமையிலான போலீசார் கொடுமுடி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த பகுதியில் சரக்கு வாகனம் கேப்பாராற்ற நிலையில் நின்றிருந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார், அந்த வாகனத்தை சோதனையிட்டனர். அப்போது, அதில் ஏராளமான மூட்டைகளில் ரேஷன் அரிசி கடத்திச்சென்றது தெரியவந்தது.

kodumudi

இதனை அடுத்து, சரக்கு வாகனத்தில் இருந்து 1,700 கிலோ ரேஷன்அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த செந்தில்குமார், கண்ணையன் ஆகியோர், கொடுமுடி சுற்றுவட்டார பகுதியில் ரேஷன்அரிசியை வாங்கி வந்து, பெருந்துறையில் உள்ள வடமாநிலத்தவர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு சென்றது தெரிய வந்தது.

மேலும், போலீசார் வருவதை அறிந்து அவர்கள் இருவரும் தப்பியோடியது தெரியவந்தது. இது தொடர்பாக குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமாறாக உள்ள இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், சரக்கு வாகனம் மற்றும் ரேஷன்அரிசியை பறிமுதல் செய்தனர்.