சுரண்டையில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை... லாரி ஓட்டுநர் போக்சோ சட்டத்தில் கைது!

 
pocso

தென்காசி மாவட்டம் சுரண்டையில் 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த லாரி ஓட்டுநர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள கழுநீர்குளம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (35). லாரி ஓட்டுநர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் இவருக்கு சமூக வலைதளம் மூலம் சுரண்டை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, இருவரும் அடிக்கடி சந்தித்து பழகி வந்துள்ளனர். அப்போது, சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவருக்கு பெரியசாமி பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதில், சிறுமி கர்ப்பமடைந்து உள்ளார்.

surandai

இந்த நிலையில், பெரியசாமிக்கு ஏற்கனவே திருமணமான விஷயம் சிறுமிக்கு தெரிய வரவே, அவர் கருவை கலைப்பதற்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு சென்றார். சிறுமி தனியாக வந்ததால் சந்தேகமடைந்த மருத்துவர்கள், இதுகுறித்து சுரண்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், போலீசார் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, பெரியசாமி ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததும், அவருக்கு திருமணமானது தெரியவந்தால் சிறுமி கருவை கலைக்க சென்றதும் தெரிய வந்தது. இதனை அடுத்து, போலீசார் பெரியசாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். தொடர்ந்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.