திருப்பத்தூர் மாவட்டத்தில் காணாமல் போன ரூ.37 லட்சம் மதிப்பிலான 163 செல்போன்கள் மீட்பு!

 
tirupattur

திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் திருட்டு மற்றும் காணாமல் ரூ.37 லட்சம் மதிப்பிலான 163 செல்போன்களை சைபர் செல் பிரிவு போலீசார் மீட்டு, அவற்றை உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் பல்வேறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செல்போன் திருட்டு மற்றும் காணாமல் போனதாக பொதுமக்கள் புகார் அளித்து இருந்தனர். இந்த புகார்கள் தொடர்பாக சம்பந்தபட்ட காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மேல் நடவடிக்கைக்காக  திருப்பத்தூர் மாவட்ட சைபர் செல் பிரிவுக்கு அனுப்பப்பட்டன. அதன் பேரில், சைபர் செல் போலீசார் துரிதமாக விசாரணை மேற்கொண்டு, மாவட்டம் முழுவதும் காணாமல் மற்றும் திருட்டு போன ரூ.37 லட்சத்து 49 ஆயிரம் மதிப்பிலான 163 செல்போன்களை கண்டுபிடித்தனர். தொடர்ந்து, நேற்று திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து, மாவட்ட எஸ்பி பாலகிருஷ்ணன், சைபர் செல் பிரிவு போலீசாரால் மீட்கப்பட்ட 163 செல்போன்களையும்,  அதன் உரிமையாளர்களிடம் நேரடியாக ஒப்படைத்தார்.

tirupattur

பின்னர் பொதுமக்கள் மத்தியில் பேசிய அவர், சட்ட விரோதமாக திருட்டு செல்போன்களை விற்பனை செய்வதும், அதை வாங்கி சிம்கார்ட் போட்டு உபயோகிப்பதும் சட்டப்படி குற்றம் என்றும், இதுபோன்ற செயல்களில் யாரேனும் ஈடுபடுவது சம்மந்தமாக எந்த ஒரு தகவல் கிடைக்கப் பெற்றாலும் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் என கூறினார். மேலும், 24 மணிநேரமும் செயல்படும் காவல் கண்காணிப்பாளர் அலுவலக காவல் உதவி எண் / வாட்ஸ்ஆப் எண் 94429 92526-ற்கு புகார்கள் தெரிவிக்கலாம் என்றும், புகார்கள் மீது உடனடியாக சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.