கோவையில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - இளைஞர் போக்சோவில் கைது!

 
pocso

கோவை ஆலாந்துறையில் 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். 

கோவை மாவட்டம் ஆலாந்துறை பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவருக்கு, கடந்த சில ஆண்டுகளுக்கு செம்மேடு பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் (22) என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது காதலாக மாறியுள்ளது. இந்த நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன் சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஸ்ரீதர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் சிறுமி கர்ப்பமடைந்து உள்ளார்.

arrest

இந்த விவகாரம் இருவரது வீட்டிற்கும் தெரியவந்த நிலையில், ஸ்ரீதர் கடந்த ஒன்றாம் தேதி அந்த பகுதியில் உள்ள கோவிலில் வைத்து சிறுமியை திருமணம் கொண்டுள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் மருத்துவ பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு சென்றபோது, சிறுமி 6 மாத கர்ப்பமாக இருப்பதும், அவருக்கு இன்னும் 18 வயது ஆகவில்லை என்பதும் மருத்துவர்களுக்கு தெரிய வந்தது.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் ஆலந்துறை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த ஸ்ரீதர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைதுசெய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.