ஈரோட்டில் இருவேறு இடங்களில் பணம் வைத்து சூதாடிய 16 பேர் கைது... ரூ.11 ஆயிரம் பறிமுதல்!

 
arrest

ஈரோடு மாவட்டம் கடத்தூர் மற்றும் சத்தியமங்கலம் பகுதியில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடிய 16 பெரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ. 11 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அடுத்த கடத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கடத்தூர் மேட்டுக்கடை பகுதியில் உள்ள தேநீர் கடையின் அருகே சிலர் கூட்டமாக பணம் வைத்து சூதாடியது தெரிய வந்தது. இதனை அடுத்து, போலீசார் அவர்களை மடக்கிப்பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

arrest generic

அதில் அவர்கள், மேட்டுக்கடையை சேர்ந்த மணி (62), சுந்தரம் (60), முருகேசன் (33), நாகராஜ் (37), பிரசாந்த் (30) மற்றும் கேத்தம்பாளையத்தை சேர்ந்த செல்வன் (40), ரமேஷ் (39), பழனிசாமி (42) ஆகியோர் என்பது தெரிய வந்தது.  தொடர்ந்து,கடத்தூர்  போலீசார்  8 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து சீட்டுக்கட்டுகள் மற்றும்  ரூ.3,500 பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல், சத்தியமங்கலம் குள்ளன்கரடு பகுதியில் உள்ள வீட்டில் பணம் வைத்து சூதாடியதாக ஜெகதீஸ்வரன் (54), சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த கருப்புசாமி (40), கிரண் (32), சம்பத்குமார் (43), ஜெகநாதன் (45), ராமலிங்கம் (40), ரமேஷ் (34), ரவி (42) ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ. 7,755 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.