புதுக்கோட்டை முக்காணிப்பட்டி ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 16 பேர் காயம்!

 
jallikattu

புதுக்கோட்டை மாவட்டம் முக்காணிப்பட்டியில் பொங்கல் விழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 16 பேர் காயமடைந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள முக்காணிப்பட்டியில் தேவாலய பொங்கல் விழாவை முன்னிட்டு இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யாநாதன்,  மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, எம்எல்ஏ முத்துராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு போட்டியை கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.  இந்த போட்டியில் புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, திண்டுக்கல், தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 600 காளைகளும், 200-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.

jallikattu

வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளையும், அதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டு காளைகளும் விடப்பட்டன. களத்தில் சீறிப்பாய்ந்து சென்ற காளைகளை இளைஞர் திமிலை பிடித்து அடக்க முற்பட்டனர். அப்போது, சில காளைகள் களத்தில் வெகு நேரம் நின்று மாடுபிடி வீரர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி சென்றன. போட்டியில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்கள் மற்றும் சிறந்த காளையின் உரிமையாளருக்கு பைக், பிரிட்ஜ், கட்டில் உள்ளிட்ட ஏராளமான வீட்டு உபயோக பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன.

இந்த போட்டியில் காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் 16 பேர் காயமடைந்தனர். மருத்துவக்குழுவினர் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேற்சிகிச்சை தேவைப்படுவோரை ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.