மதுரை மாநகரில் காணாமல் போன ரூ.17 லட்சம் மதிப்பிலான 159 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு!

 
mdu

மதுரை மாநகர பகுதிகளில் கடந்த 3 மாதங்களில் காணாமல்போய் மீட்கப்பட்ட ரூ.17 லட்சம் மதிப்பிலான 159 செல்போன்களை காவல் ஆணையர் செந்தில்குமார், உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்.

மதுரை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 3 மாதங்களில் காணாமல் போன மற்றும் திருட்டு போன செல்போன்களை கண்டுபிடிக்க, மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, தனிப்படை அமைக்கப்பட்டு, சைபர் க்ரைம் போலிசாரின் உதவியுடன் ரூ.17 லட்சம் மதிப்பிலான 159 செல்போன்கள் மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட செல்போன்களை நேற்று மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து, காவல் ஆணையர் செந்தில்குமார், அவற்றின் உரிமையாளர்களிடம் வழங்கினார். 

police

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆணையர் செந்தில்குமார் கூறியதாவது - மதுரை மாநகர காவல் துறையை நவீனமாக்கும் வகையில், மாநகர காவல் எல்லை பகுதிகளில் சூரிய சக்தி மூலம் இயங்கும் சோதனைச்சாவடிகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இவற்றில் காவல் ஆணையர் அலுவலகத்துடன் இணைக்கப்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். தற்போது ஒரு சோதனைச்சாவடி திறக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் மற்ற சோதனைச்சாவடிகளும் சூரிய சக்தி மூலம் இயங்கும் சோதனைச்சாவடிகளாக மாற்றியமைக்கப்படும். மேலும், திருவிழாக்காலங்கள், கூட்ட அதிகமுள்ள இடங்களில் காண்காணிப்பு பணியில் ஈடுபட சிசிடிவி கேமராக்களுடன் கூடிய நடமாடும் சோதனைச்சாவடி உருவாக்கப்பட்டு உள்ளது.

ஓருங்கிணைந்த புகார் தீர்வு மையம் சார்பில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டு உள்ளது, என அவர் தெரிவித்தர்.  இந்த நிகழ்ச்சியில் காவல் துணை ஆணையர் தெற்கு சாய் பிரனீத், போக்குவரத்து துணை ஆணையர் ஆறுமுகச்சாமி மற்றும் தலைமையிட துணை ஆணையர் வனிதா  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.