காட்பாடியில் ரயிலில் கடத்திய 15 கிலோ கஞ்சா பறிமுதல்!

 
cannabis

வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையம் வந்த ஹதியா விரைவு ரயிலில் கடத்திவரப்பட்ட 15 கிலோ கஞ்சாவை ரயில்வே போலிசார் பறிமுதல் செய்தனர்.

வடமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் விரைவு ரயில்களில் சமீப நாட்களாக கஞ்சா மற்றும் குட்கா புகையிலை பொருட்கள் கடத்திச்செல்வது அதிகரித்து உள்ளது. இதனை அடுத்து, ரயில்களில் ரயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் ஜார்க்கண்ட் மாநிலம் ஹதியாவில் இருந்து கர்நாடக மாநிலம் யஷ்வந்த்புர் செல்லும் விரைவு ரயில் நேற்று காலை வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்திற்கு வந்தது.

katpadi

அந்த ரயிலில் காட்பாடி ரயில்வே போலிசார் ஏறி ஒவ்வொரு பெட்டியாக சோதனை மேற்கொண்டனர். அப்போது, முன்பதிவு பெட்டியின் கழிவறை அருகே 2  பைகள் கேட்பாரற்ற நிலையில் கிடந்தன. இதுகுறித்து அந்த பெட்டியில் இருந்த பயணிகளிடம் விசாரித்தபோது, அவர்கள் தங்களுடையது இல்லை என தெரிவித்தனர். இதனால் சந்தேகமடைந்த ரயில்வே போலீசார், அந்த பைகளை பிரிந்து பார்த்தனர்.

அப்போது, அதில் பண்டல் பண்டலாக கஞ்சா கடத்திச் செல்வது தெரிய வந்தது. இதனை அடுத்து, 24 பண்டல்களில் இருந்த 15 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீசார் பறிமுதுல் செய்து, காட்பாடி ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து கஞ்சாவை கடத்திய நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.