"விருதுநகரில் இடியும் நிலையில் உள்ள 143 கட்டிடங்கள் இடித்து அகற்றம்" - ஆட்சியர் மேகநாத ரெட்டி தகவல்!

 
school building

விருதுநகர் மாவட்டத்தில் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள 194 அரசுக் கட்டிடங்களில் 143 கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், விருதுநகர் மாவட்டத்தில்  உள்ள பழுதடைந்த கட்டிடங்களில் சேதமடைந்து இடிந்து விழும் நிலையிலோ அல்லது பொதுமக்களுக்கு உயிர்ச்சேதம் விளைவிக்கக் கூடிய நிலையிலோ உள்ள அரசுக்கு சொந்தமான கட்டிடங்களை உடன் இடித்து அப்புறப்படுத்த அரசு ஆணையிட்டது. அதனை தொடர்ந்து,  விருதுநகர் மாவட்டத்தில் ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்துக்கு சொந்தமான 194 கட்டிடங்கள் கண்டறியப்பட்டு, கீழ்காணும் விபரப்படி ஊராட்சி துறையின் மூலம் மாவட்ட ஆட்சியரின் அனுமதிப்படி இடித்து அப்புறப்படுத்தப்பட்டு உள்ளது.

virudhunagar

இதன்படி, காரியாப்பட்டியில் 7 பள்ளிக் கட்டிங்கள், ஒரு அங்கன்வாடி மற்றும் பிற கட்டிடங்கள் என 31 கட்டிங்களும், ஸ்ரீவில்லிபுத்தூரில்  6 பள்ளி கட்டிடங்கள், 4 அங்கன்வாடிகள் உள்பட 26 கட்டிடங்களும் இடித்து அகற்றப்பட்டு உள்ளது. இதேபோல், சிவகாசியில் 20,  சாத்தூரில் 18, வத்திராயிருப்பில் 15, விருதுநகரில் 14, திருச்சிசுழி மற்றும் ராஜபாளையத்தில் தலா 6, நரிக்குடியில் 5 மற்றும் அருப்புக்கோட்டையில் 2 என 10 ஒன்றியங்களில் 143 கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டு உள்ளது. இவற்றில் 36 பள்ளிக்கட்டிடங்கள், 21 அங்கன்வாடி மையங்கள் மற்றும் பிற கட்டிடங்கள் 86 அடங்கும்.

நிர்வாக அனுமதி வழங்கப்பட்ட 194 கட்டிடங்களில்  மேற்கண்டவாறு 143 கட்டிங்கள்  இடித்து அப்புறப்படுத்தப்பட்டு உள்ளது. மீதமுள்ள 51 கட்டிடங்களில்  2 அங்கன்வாடி மைய கட்டிடங்கள்,15 பள்ளி கட்டிடங்கள் மற்றும் 34  பிற கட்டிடங்கள் (மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், சமையலறை கட்டிடங்கள் மற்றும் கழிவறை கட்டிடங்கள்) இடிக்கப்பட்டு வருகிறது என ஆட்சியர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார்.