தூத்துக்குடி மாவட்டத்தில் 88 மையங்களில் பிளஸ் 2 பொதுத்தேர்வு துவக்கம்... ஆட்சியர் செந்தில்ராஜ் நேரில் ஆய்வு!

 
tuti

தமிழகம் முழுவதும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் 88 தேர்வு மையங்களில் 20 ஆயிரத்து 370 மாணவ, மாணவிகள் தேர்வை எழுதுகின்றனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று துவங்கி நடைபெற்று வருகிறது. இதனையொட்டி, தூத்துக்குடி மாவட்டத்தில் 88 தேர்வு மையங்களில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் மாவட்டத்தில் உள்ள 203 பள்ளிகளில் பயிலும் 9,407 மாணவர்களும், 10,963 மாணவிகளும் என 20 ஆயிரத்து 370 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதி வருகின்றனர். இதனையொட்டி, பள்ளிகளில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும், தடையற்ற மின்சாரம் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

tuti

தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப் பள்ளியில் உள்ள தேர்வு மையத்தில் மாணவர்கள் தேர்வெழுதுவதை, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர் செந்தில்ராஜ், தூத்துக்குடி மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 5,842 பேரும், தூத்துக்குடி கல்வி மாவட்டத்தில் 9,462 பேரும், திருச்செந்தூர் கல்வி மாவட்டத்தில் 5,066 பேரும் என மொத்தம் 20,370 பேர் எழுதுவதாக கூறினார்.

மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு வசதியாக மாவட்டம் முழுவதும் 88 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளதாவும், தேர்வு மையங்களில் குடிநீர், தடையற்ற மின்சார வசதிகள் செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், பள்ளிகளில் போலீஸ் பாதுகாப்பும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும் ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.