பெரம்பலூர் அருகே வீட்டின் கதவை உடைத்து 12 பவுன் நகை கொள்ளை!

 
robbery

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே வீட்டின் கதவை உடைத்து 12 பவுன் நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள அரும்பாவூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். விவசாயி. இவரது மனைவி பரிமளம். இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவு ரஜேந்திரன், தனது மனைவி பரிமளத்துடன் தங்களுக்கு சொந்தமான தோட்டத்து வீட்டில் தங்கி இருந்தார். இதனால் வீட்டில் அவரது தாய் விஜயா மற்றும் பிள்ளைகள் மட்டும் இருந்துள்ளனர். வீட்டில் அனைவரும் உறங்கிய நிலையில், நள்ளிரவில் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், பீரோவில் வைத்திருந்த 12 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.5 ஆயிரம் பணம் ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பிச்சென்றனர்.

perambalur

காலையில் விஜயா எழுந்து பார்த்தபோது நகைகள் திருடு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து ராஜேந்திரன் அரும்பாவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விவசாயி வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.