கோவையில் ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகை கொள்ளை!

 
robbery

கோவை வடவள்ளி அருகே தனியார் பள்ளி ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் தங்க நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.

கோவை வடவள்ளி அடுத்த சுண்டப்பாளையம் ஹரி ஸ்ரீகார்டனை சேர்ந்தவர் அன்பு சிவா. இவர் சென்னையில் உள்ள தனியார் பல்கலை.யில் பேராசிரியராக பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி பாக்கியலட்சுமி (42). இவர் வடவள்ளியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியை ஆக வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகன் சர்வேஷ்(7), அங்குள்ள பள்ளி ஒன்றில் 2ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், சம்பவத்தன்று காலை பாக்கியலட்சுமி  தனது மகனை பள்ளிக்கு அனுப்பி விட்டு, வழக்கம் போல் வேலைக்கு புறப்பட்டு சென்றார். பின்னர் பணி முடிந்து மாலையில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது, அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.

police

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பாக்கியலெட்சுமி, வீட்டின் உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது, மர்மநபர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த 12 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.4.5 லட்சம் ஆகும். இது குறித்து பாக்கியலட்சுமி, வடவள்ளி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.