திசையன்விளையில் நகை வாங்குவது போல நடித்து 11 பவுன் கொள்ளை; தப்பியோடிய இருவருக்கு போலீஸ் வலை!

 
cctv

திசையன்விளையில் நகை வாங்குவது போல நடித்து, நகைக்கடை ஊழியரின் கவனத்தை திசை திருப்பி 11 பவுன் நகையை திருடிச் சென்ற 2 நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

நெல்லை மாவட்டம் திசையன்விளையில், மெய்கண்ட மூர்த்தி என்பவருக்கு சொந்தமான நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், சம்பவத்தன்று மெய்கண்ட மூர்த்தி வெளியே சென்றிருந்த நிலையில், ஊழியர் கதிரேசன் வியாபாராத்தை கவனித்து வந்துள்ளார்.இந்த நிலையில், பகல் 12.30 மணிக்கு கடைக்கு வந்த 2 இளைஞர்கள், புதிதாக கட்டும் வீட்டின் நிலைவாசல் அடியில் வைப்பதற்காக தங்க தகடு மற்றும் நவரத்தின கற்களை கேட்டுள்ளனர். அத்துடன் வேறு நகைகள் வாங்குவதாக கூறி மாடல்களை காட்ட சொல்லியுள்ளனர். 

cctv

அதன்படி, கதிரேசன் அவர்களுக்கு பல்வேறு நகைகளை காட்டிய நிலையில், டிசைன்கள் பிடிக்கவில்லை என அனைத்தையும் வேண்டாம் என கூறிய அந்த இளைஞர்கள், தங்க தகடை மட்டும் வாங்கிகொண்டு புறப்பட்டு சென்றனர். சிறிது நேரத்திற்கு பின்னர் மெய்கண்ட முர்த்தி கடைக்கு வந்து நகைகளை பரிசோதித்தபோது நகை செய்ய பயன்படும் 24 காரட் தங்கக்கட்டி, தங்க நாணயங்கள் உள்ளிட்ட 11 பவுன் நகைகள் மாயமானது தெரியவந்தது.

இதனை அடுத்து, கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்தபோது, தங்க தகடு வாங்க வந்த இருவரும் ஊழியர் கதிரேசனின் கவனத்தை திசை திருப்பி நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மெய்கண்ட மூர்த்தி திசையன்விளை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகள்  அடிப்படையில் கொள்ளையில் ஈடுபட்ட இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.