கரூர் அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கி 10ஆம் வகுப்பு மாணவர் பலி!

 
drowned

கரூர் மாவட்டம் தென்னிலையில் தோட்டத்து தண்ணீர் தொட்டியில் குளித்தபோது நீரில் மூழ்கி 10ஆம் வகுப்பு மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கரூர் மாவட்டம் தென்னிலை மலைக்கோவில் காலனியை சேர்ந்தவர் ராமசாமி. விவசாயி. இவரது மகன் பூமிநாதன் (16). இவர் தென்னிலை அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் விடுமுறை காரணமாக வீட்டில் இருந்த பூமிநாதன், நண்பர்களுடன் அதே பகுதியில் உள்ள சேகர் என்பவருக்கு சொந்தமான தோட்டத்து தண்ணீர் தொட்டிக்கு குளிக்க சென்றுள்ளார். 10 அடிக்கு மேல் ஆழமுள்ள அந்த கிணற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அவர் தண்ணீரில் மூழ்கினார். இதனை கண்டு அவரது நண்பர்கள் கூச்சலிடவே, அருகில் இருந்தவர்கள் ஓடிச்சென்று தொட்டிக்குள் இறங்கி தேடினர்.

karur

அப்போது, மயங்கிய நிலையில் கிடந்த பூமிநாதனை மீட்ட கிராமத்தினர், அவரை சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பூமிநாதனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை கேட்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் தென்னிலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.