10ஆம் வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் தொல்லை... இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது!

 
rape

கள்ளக்குறிச்சி அருகே 10ஆம் வகுப்பு மாணவியை கடத்திச்சென்று பாலியல் தொல்லை அளித்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் வீரசோழபுரம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் பிரசாந்த் (23). இவர் அதே பகுதியை சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவியுடன் பழகி வந்துள்ளார். வெளியூரில் படித்து வந்த மாணவி, சமீபத்தில் விடுமுறைக்காக தனது வீட்டிற்கு வந்திருந்தார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டில் இருந்த மாணவி திடீரென மாயமாகி உள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். அப்போது, பிரசாந்த், மாணவியை சென்னைக்கு கடத்திச் சென்றது தெரிய வந்தது. இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று பிரசாந்த், மாணவியை மீண்டும் அவரது வீட்டிற்கு சென்று விட்டுள்ளார். 

arrest

மாணவியிடம் பெற்றோர் விசாரித்தபோது பிரசாந்த், திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு அழைத்துச் சென்று, அங்கு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், இது குறித்து கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார், பிரசாந்த் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். தொடர்ந்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.