நெல்லையில் துணிகரம்... வீட்டின் கதவை உடைத்து 100 பவுன் நகை கொள்ளை... மர்மநபர்கள் கைவரிசை!

 
robbery

திருநெல்வேலியில் நெடுஞ்சாலைத் துறை பெண் ஊழியர் வீட்டின் கதவை உடைத்து 100 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருநெல்வேலி பெருமாள்புரம் கனரா வங்கி காலனியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மனைவி தேவி (58). இவர் நெடுஞ்சாலைத் துறையில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்ட நிலையில், பிள்ளைகள் இருவரும் சென்னையில் வசித்து வருகின்றனர். இதனால் தேவி திருநெல்வேலியில் தனியே வசித்து வந்தார். இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை ஒட்டி பிள்ளைகளை பார்ப்பதற்காக கடந்த சில நாட்களுக்கு முன் தேவி வீட்டை பூட்டிவிட்டு சென்னைக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

police

இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக் கிழமை அவரது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்துள்ளது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக தேவிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தேவி, பெருமாள்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மர்மநபர்கள் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த 100 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்றது தெரிய வந்தது.

தொடர்ந்து, மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் கைரேகை பதிவுகள் சேகரிக்கப்பட்டன. தொடர்ந்து,  பெருமாள்புரம் போலீசார் இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். நெடுஞ்சாலைத்துறை பெண் அதிகாரி வீட்டில் 100 பவுன் நகைகள் திருடப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.