உடுமலையில் அட்டைபெட்டி நிறுவன உரிமையாளர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை!

 
robbery

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அட்டை பெட்டி நிறுவன உரிமையாளர் வீட்டில் 100 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை காந்தி நகர் யு.எஸ்.எஸ். காலனியில் வசித்து வருபவர் நவீன். இவர் சொந்தமாக அட்டைப் பெட்டி தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை கோவையில் நடைபெற்ற உறவினர் இல்ல நிகழ்ச்சிக்கு நவீன் தனது குடும்பத்தினருடன் புறப்பட்டு சென்றுள்ளார். இதனை அறிந்த மர்ம நபர்கள், நள்ளிரவில் அவரது வீட்டின் மாடியில் உள்ள ஜன்னல் கம்பிகளை உடைத்து, உள்ளே புகுந்து அங்கு பீரோவில் வைத்திருந்த 100 பவுன் தங்க நகைகளை திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். 

udumalai

இந்த நிலையில், கோவையில் இருந்து நேற்று இரவு வீட்டிற்கு திரும்பிய நவீன், வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு 100 பவுன் நகைகள் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் உடனடியாக உடுமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் கைரேகை பதிவுகள் சேகரிக்கப்பட்டது. தொடர்ந்து, இந்த கொள்ளை சம்பவம் குறித்து உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.