பழனியில் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை, ரூ.10 லட்சம் பணம் கொள்ளை!

 
robbery

பழனியில் விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை மற்றும் ரூ.10 லட்சம் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே நேதாஜி நகரை சேர்ந்தவர் செல்வராஜ். விவசாயி. இவர் கடந்த வியாழக்கிழமை இரவு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கோவையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த நிலையில், நள்ளிரவில் மர்மநபர்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.10 லட்சம் ரொக்கப்பணத்தை திருடிச்சென்றனர். நேற்று காலை செல்வராஜ் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அருகில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அவர்கள், செல்வராஜ் மற்றும்  பழனி டவுன் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த, போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

palani town

மேலும், தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை கொள்ளையர்களின் கைரேகை பதிவுகளை சேகரித்தனர். தொடர்ந்து, இந்த கொள்ளை சம்பவம் குறித்து செல்வராஜ் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.