தருமபுரி அருகே கண்டெய்னர் லாரியில் ரகசிய அமைத்து கடத்திய 1 டன் குட்கா பறிமுதல் - இருவர் கைது!

 
dd

தருமபுரி அருகே கண்டெய்னர் லாரியில் ரகசிய அறை அமைத்து கடத்திவந்த 1 டன் குட்காவை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து தருமபுரி வழியாக சேலத்திற்கு குட்கா கடத்திச்செல்வதாக தொப்பூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த பாளையம் சுங்கச்சாவடி பகுதியில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த மினி ஈச்சர் கண்டெய்னர் லாரியை போலீசார் நிறுத்தி சோதனையிட்டனர். அந்த லாரியில் சரக்கு எதுவுமின்றி காலியாக இருந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் லாரியில் ஏறி பார்த்தபோது, அதன் உள்ளே ரகசிய அறை உள்ளது தெரியவந்தது. போலீசார் அதனை உடைத்து பார்த்தபோது மூட்டை மூட்டையாக குட்கா, பான் மசாலா பொருட்கள் கடத்திச்சென்றது தெரிந்தது.

thoppur

இதனை அடுத்து, கண்டெய்னரில் இருந்த 1 டன் அளவிலான குட்காவையும், கடத்தலுக்கு பயன்படுத்திய கண்டெய்னர் லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.  பறிமுதல் செய்த குட்காவின் மதிப்பு சுமார் ரூ. 20 லட்சம் ஆகும்.  குட்காவை கடத்தியது தொடர்பாக லாரி ஓட்டுநர் வேலூரை சேர்ந்த சாதிக் பாஷா (30) , மாற்று ஓட்டுநர் பயாஸ் அகமது (32) ஆகியோரை கைது செய்து, தொப்பூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு குட்கா கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.