திருச்சி மாவட்டத்தில் 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 1.02 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்!

 
exam

திருச்சி மாவட்டத்தில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வினை 1 லட்சத்து 2 ஆயிரத்து 790 மாணவ, மாணவிகள் எழுத உள்ளதாக, ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், திருச்சி மாவட்டத்தில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் வரும் 5ஆம் தேதி தொடங்கி மே 28 வரையிலும், மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் வரும் 10ஆம் தேதி தொடங்கி மே 31 வரையிலும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் 6ஆம் தொடங்கி மே 30 வரையிலும் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதில், மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வினை 15,522 மாணவர்களும், 17,599 மாணவிகளும் என மொத்தம் 33,121 பேர் எழுதவுள்ளனர். மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்வினை 16,811 மாணவர்களும், 17,605 மாணவிகளும் என மொத்தம் 34,416 பேர் எழுத உள்ளனர். இதற்காக 126 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும், இத்தேர்வு நடத்துவதற்கு 126 தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களும், 126 துறை அலுவலர்களும், 2,134 அறை கண்காணிப்பாளர்களும் நியமனம் செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

trichy collector

இதேபோல், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 17,713 மாணவர்களும், 17,540 மாணவிகளும் என மொத்தம் 35,253 பேர் தேர்வு எழுதவுள்ளனர். இதற்காக 165 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இத்தேர்வு நடத்துவதற்கு 165 தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களும், 165 துறை அலுவலர்களும், 2,099 அறை கண்காணிப்பாளர்களும் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். தனித் தேர்வர்கள் மேல்நிலை முதலாமாண்டு, இரண்டாமாண்டு பொதுத்தேர்வினை 4 மையங்களிலும், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வினை 5 மையங்களிலும் எழுத உள்ளனர். அத்துடன் திருச்சி மத்திய சிறைச்சாலையில் ஒரு மையத்தில் சிறை தேர்வர்கள் தேர்வு எழுதவுள்ளனர். 

பொதுத்தேர்வு நடைபெறும் மையங்களில் முறைகேடுகளை தடுக்க 270 ஆசிரியர்கள் நிலையான, பறக்கும் படை உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தேர்வு நடைபெறும் நேரம் முழுவதும், மையத்திலேயே தங்கியிருந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவியர்கள் தன்னம்பிக்கையுடன் நன்முறையில் தேர்வினை எதிர்கொண்டு, அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற வாழ்த்துக்கள் தெரிவிப்பதாக என ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.