கர்நாடக மாநில துணை சபாநாயகர் தர்மேகவுடாவின் உடல் தண்டவாளத்தில் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிக்மகளூரு, கடூரில் உள்ள ரயில் நிலைய தண்டவாளத்தில் இன்று காலை துணை சபாநாயகர் எஸ்.எல்.தர்மேகவுடவின் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. அங்கு சடலம் ஒன்று கிடப்பதாக அங்கிருந்தோர் போலீசாருக்கு தகவல் கொடுத்ததாகவும், விரைந்து வந்த போலீசார் சடலத்தை பார்க்கையில் எஸ்.எல்.தர்மேகவுடாவின் சடலம் என தெரிய வந்ததாகவும் கூறப்படுகிறது. அதோடு, அங்கிருந்து ஒரு கடிதமும் கைப்பற்றப்பட்டிருப்பதாக தெரிகிறது.

துணை சபாநாயகர் தர்மேகவுடாவின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், அங்கு கிடைக்கப்பெற்ற கடிதத்தில் அடிப்படையில் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மேகவுடாவின் மறைவு கர்நாடக மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது மறைவு மாநிலத்திற்கே ஏற்பட்ட பேரிழப்பு என ஜே.டி.எஸ் தலைவரான எச்.டி.தேவேகவுடா தெரிவித்திருக்கிறார்.