இறைவனுக்கு உகந்த மார்கழி மாதத்தின் சிறப்புகள்!

 
Margazhi Month Margazhi Month

இன்று மிகவும் புனிதமான மார்கழி மாதம் பிறக்கிறது. மாதங்களில் நான் மார்கழி என்று கண்ணபிரான் கூறுகிறார். ஒவ்வொரு மாதங்களில் குறிப்பிட்ட நாட்கள் சில கடவுள்களுக்குச் சிறந்த நாளாக இருக்கும். ஆனால், மார்கழி மட்டுமே மாதம் முழுக்க உகந்த நாளாகப் போற்றப்படுகிறது.

மார்கழி மாதத்தை சைவர்கள் தேவர் மாதம் என்று குறிப்பிடுவார்கள். அதாவது கடவுளை வழிபடும் மாதம். கடவுளை வழிபடுவதற்காக இந்த மாதம் ஒதுக்கப்பட்டுள்ளதால், இந்த மாதத்தில் சுப காரியங்களை யாரும் செய்ய மாட்டார்கள். அதனாலேயே மார்கழி என்றால் பீடை மாதம் என்று சிலர் தவறாகக் கருதுவதும் உண்டு.

இந்த மார்கழி மாதத்தில் சைவர்கள் சிவன் கோவில்கள் அனைத்திலும் திருவெம்பாவை பாடல்களை பாடுவார்கள். வைணவர்கள் பெருமாள் கோவில்களில் திருப்பாவை பாடல்களை பாடுவார்கள். பிரபலமான திருப்பதி வெங்கடாச்சலபதி கோவிலிலும் கூட இந்த மார்கழி மாதம் முழுவதும் சுப்ரபாத சேவை நிறுத்தப்பட்டு, திருப்பாவை பாடல்கள் பாடப்படுவது வழக்கம்.

ஆண்டாள் தாயார் மார்கழியின் 30 நாட்களும் பாவை விரதம் இருந்து பெருமாளையே மணாளனாகக் கொண்டார். எனவே, நல்ல மணவாளன் கிடைக்க பெண்கள் இந்த மாதத்தில் பாவை நோன்பு இருப்பது வழக்கம். திருமணம் ஆன பெண்கள், கணவன் நலனுடன் வாழ பாவை நோன்பு இருப்பார்கள்.

30 நாட்கள் பாவை விரதம் இருக்கும் பெண்களுக்கு உடனே திருமணம் ஆகும் என்பது நம்பிக்கை. இதற்கு ஒரு விளக்கமும் சொல்லப்படுகிறது. மார்கழி மாதத்தின் மற்றொரு சிறப்பு வீடுகளில் அதிகாலையே எழுந்து, வாசலை சுத்தம் செய்து மிகப்பெரிய கோலமிட்டு, கோலத்தில் சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைப்பார்கள். அந்தக் காலத்தில் வீட்டில் திருமணத்துக்கு பெண் இருக்கிறாள் என்பதைக் காட்ட கோலத்தில் பூசனி பூவை வைப்பார்கள்.

மார்கழியில் வீதி வீதியாக பஜனை செய்வார்கள். அப்படி பஜனை செய்ய வருபவர்கள் பூசனி பூவை பார்க்கும் போது, இந்த வீட்டில் திருமணத்துக்குத் தயார் நிலையில் பெண் இருக்கிறார் என்பதை உணர்ந்து, பெண் கேட்டு வருவார்கள். திருமணம் விரைவாக நடக்கும்.

திருப்பள்ளியெழுச்சி என்பது சிவபெருமான் தளங்களில் பாடப்படுவது ஆகும். மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவையின் 20 பாடல்கள், திருப்பள்ளியெழுச்சியிலுள்ள பத்து பாடல்களுடன் சேர்த்து அதுவும் 30 பாடல்களாக மார்கழி மாதம் 30 நாட்களிலும் பாடப்படுகின்றது.

பாரதப் போர் நடந்தது இந்த மார்கழி மாதத்தில்தான் என்று புராணங்கள் கூறுகின்றன. திருப்பாற்கடலைக் கடைந்த போது வெளிப்பட்ட விஷத்தை உண்டு உலக மக்கள் அனைவரையும் சிவபெருமான் காப்பாற்றியதும் இதே மார்கழி மாதத்தில்தான். இந்திரனால் பெரு மழை வெள்ளம் உருவாக்கப்பட்டு கோகுலத்தில் அனைவரும் துன்பப்பட்டபோது, கோவர்த்தனகிரி மலையை, கிருஷ்ணர் குடையாகப் பிடித்து மக்களை காப்பாற்றியதும் இந்த மார்கழி மாதத்தில்தான். எனவே, சிறப்பு மிக்க இந்த மார்கழி மாதத்தில் இறைவனை வணங்கி வளங்களைப் பெறுவோம்!