பாவகங்கள் போக்கும் கங்கை ஏன் தன் ஏழு குழந்தைகளை கொன்றாள் தெரியுமா?
மகா பாரதத்தில் வரும் பீஷ்மர், சபதம் காரணமாக பிரம்மச்சரியம் மேற்கொண்டு நீண்ட காலம் வாழ்ந்தவர். ஒரு சாபம் காரணமாகவே அவர் வாழ்க்கை அப்படி அமைந்தது என்று மகாபாரதம் கூறுகிறது.
அஸ்தினாபுரத்தின் மன்னன் சாந்தனு கங்கையின் அழகில் மயங்கினான். தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி கங்கையைக் கேட்டுக்கொண்டான். கங்கையும் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டால் திருமணம் செய்துகொள்ள தயார் என்றார். திருமணத்துக்குப் பிறகு நான் என்ன செய்தாலும் என்னைத் தடுக்கக் கூடாது. அப்படி தடுத்தால் உங்களை விட்டுப் பிரிந்துவிடுவேன் என்பதுதான் கங்கை விதித்த நிபந்தனை. இதை சாந்தனு ஏற்றுக்கொண்டான். அவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து குழந்தை பிறந்தது.
குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் சாந்தனு துள்ளிக் குதித்தான். ஆனால், கங்கையே குழந்தையைத் தூக்கிக்கொண்டு சென்று கங்கை நதியில் விட்டு கொலை செய்தாள். இப்படி ஏழு குழந்தைகளை கொண்டு சென்று ஆற்றில் விட்டாள். எட்டாவது குழந்தையாக பீஷ்மர் பிறந்தார். அவரை தூக்கிக்கொண்டு ஆற்றில் விடக் கொண்டு சென்றாள் கங்கை. பொறுக்க முடியாத சாந்தனு, கங்கையைத் தடுத்தார். ஏன் இப்படி செய்கிறாய் என்றும் கேட்டார்.
தன்னுடைய நிபந்தனையை மீறிவிட்டதாக கூறிய கங்கை, இனி ஒன்றாக வாழ முடியாது என்று கூறிவிட்டு, குழந்தைகளை கொலை செய்ததற்கான காரணத்தையும் கூறினார்.
இயற்கையின் அம்சங்களான ஏழு வசுக்கள் இந்திர லோகத்திலிருந்து தங்கள் மனைவிகளுடன் பூமிக்கு வந்தனர். அப்போது மகரிஷி வசிஷ்டர் ஆசிரமத்தில் பசு ஒன்று கட்டப்பட்டிருப்பதை பிரபாசா என்ற வசுவின் மனைவி கண்டு, தனக்கு அந்த பசு வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பசுவால் நமக்கு எந்த பயனும் இல்லை, நாம் எல்லாம் அமரர்கள் என்று எவ்வளவோ எடுத்துக் கூறியும் பிரபாசாவின் மனைவி கேட்டுக்கொள்ளவில்லை. தொடர்ந்து வற்புறுத்தவே வேறு வழியின்றி அதைத் திருடிச் செல்ல அஷ்ட வசுக்கள் முடிவு செய்தனர்.
வசிஷ்டர் திரும்பி வந்து பசுவைக் காணவில்லை என்பதை அறிந்து, அவர் தனது தெய்வீக தரிசனத்தின் மூலம், நடந்த அனைத்தையும் கண்டு, 8 வசுக்களையும் இந்த உலகில் மனிதர்களாகப் பிறக்கச் சபித்தார். இந்த சாபத்தை அறிந்த 8 வசுக்களும் ஓடிவந்து வசிஷ்டரின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டனர். வசிஷ்டர் சாபத்தை நீக்க முடியாது, அதன் போக்கைப் பின்பற்ற வேண்டும் என்று கூறினார்.
ஆனால் சாபத்தின் பலனைக் குறைக்கலாம். அதற்கு- கங்கா தேவியிடம் பூமியில் தங்களுக்குத் தாயாக இருக்கும்படி வேண்டிக்கொள்ள வேண்டும். குழந்தையாக பிறந்ததுமே உன் பிறவியிலிருந்து விடுபடும்படி அவளிடம் கேட்க வேண்டும் என்றார். இப்படி செய்வதால் நீங்கள் நீண்ட வருடங்கள் துன்பம் இன்றி தேவலோகம் திரும்பலாம்.
பிரபாசாவின் திருட்டுச் செயலுக்கு ஆதரவளித்த உங்களில் 7 பேருக்கு இந்தக் குறைப்பை வழங்குகிறேன். உண்மையில் பசுவைத் திருடியவர் பிரபாசா என்பதால் அந்தச் சாபம் விமோசனம் அவருக்கு பலன் அளிக்காது. அவர் பூமியில் தனது முழு வாழ்நாளையும் மனிதனைப் போல வாழ வேண்டியிருக்கும். ஆனால் அவர் ஒரு சிறந்த வாழ்க்கையை வாழ்வார். பூமியில் வாழ்ந்த சிறந்த ஆத்மாக்களில் ஒருவராக கருதப்படுவார். இவ்வாறு கூறிவிட்டு வசிஷ்டர் மீண்டும் தியானத்தில் ஆழ்ந்தார்.
அதன்படி வசுக்கள் ஏழு பேர் கங்கையின் புதல்வர்களாகப் பிறந்து, விண்ணகம் சென்றனர். எட்டாவதாக பிறந்த வசுதான் பீஷ்மர். அவரை சில காலம் கங்கை வளர்த்துச் சரியான வயது வந்ததும் சாந்தனிடம் ஒப்படைத்தார்.

