கார்த்திகை தீபம் விளக்கேற்றும் முறை!

 
Karthigai Deepam

சிவபெருமான், முருகன், விஷ்ணுவுக்கு உகந்த மாதமாக கார்த்திகை மாதம் விளங்குகிறது. ஜோதி வடிவமாக சிவபெருமானை கார்த்திகை தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபடுவது வழக்கம். திருக்கார்த்திகை திருவிழா நாளை (நவம்பர் 19ம் தேதி) தமிழகம் முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட உள்ளது. இன்றைய நாளில் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை பற்றிப் பார்ப்போம்.

கார்த்திகை தீபத்தன்று வீடுகளில் விளக்கேற்றி இறைவனை வழிபடுவது தமிழர்களின் வழக்கம். வீடுகளில் எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும், எதில் தீபம் ஏற்ற வேண்டும் என்று சில விதிமுறைகள் உள்ளன. திருவண்ணாமலையில் மாலை ஆறு மணிக்கு கார்த்திகை தீபம் ஏற்றப்படும். அந்த நேரத்தில் நம்முடைய வீடுகளிலும் கார்த்திகை தீபத்தை ஏற்ற வேண்டும்.

வீடுகளில் அகல் விளக்குகளை ஏற்றி வீடு முழுக்க ஒளி வெள்ளமாக காட்சி அளிக்கும் வகையில் வைத்து கொண்டாட வேண்டும். அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப அதிக அளவில் விளக்குகளை ஏற்றலாம். அல்லது 27 நட்சத்திரங்களைக் குறிக்கும் வகையில் 27 விளக்குகள் ஏற்றினாலே போதுமானது.

அந்த காலத்தில் வீட்டின் தாழ்வாரம், முன்னறை, சமையற்கூடம், திண்ணை, மாடம் என்று பல பகுதிகள் இருக்கும். அதற்கு ஏற்றார்போல் விளக்குகள் வைப்பார்கள். இப்போது ஹால், கிட்சன், பெட்ரூம் என்று வீடுகள் சுருங்கிவிட்டது. அடுக்குமாடிக்குடியிருப்புகளில் வாசலில் வைப்பது கூட கடினமாக மாறிவிட்டது. இந்த சூழலில் வசதிக்கு ஏற்ப 27 விளக்குகளை வரவேற்பறை, படுக்கை அறை, நிலைவாசல், சமையல் அறையில் வைக்கலாம்.

இன்று (வியாழக்கிழமை) பரணி தீபம் ஏற்ற வேண்டும். நாளை கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும். அதற்கு அடுத்த நாள் (சனிக்கிழமை) வீடுகளில் விளக்கேற்ற வேண்டும். சிலர் கார்த்திகை மாதம் முழுக்க வீட்டு வாசல்களில் அகல் விளக்குகளை ஏற்றுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

விளக்கேற்றும்போது பசு சாணம் மீது அகல் விளக்குகளை வைக்க வேண்டும். பசு சாணம் வைக்க வசதி இல்லாதவர்கள் வாழை இலையின் மீது அகல் விளக்குகளை வைக்க வேண்டும்.

அகல் விளக்கில் பசு நெய் விட்டு, பஞ்சு திரிவைத்து விளக்கேற்ற வேண்டும். தீபத்தின் சுடரில் மகாலட்சுமியும், ஒளியில் சரஸ்வதியும், வெப்பத்தில் பார்வதியும் எழுந்தருளுவதாக நம்பிக்கை. இந்த நாட்களில் விளக்கேற்றுவதன் மூலம் முப்பெரும் தேவியரின் அருளைப் பெறலாம்.

கார்த்திகை தீபத்தைக் கொண்டாடும் வகையில் இன்று பரணி நட்சத்திர நாளில் ஒரு வேளை மட்டும் உணவு உண்டு விரதம் இருக்க வேண்டும். நாளை காலை எழுந்து குளித்து, சிவபெருமானை வழிபட வேண்டும். மாலையில் தீபம் ஏற்றிய பிறகு பழச்சாறு அருந்தி விரதத்தை முடித்து, சிற்றுண்டியாக எடுத்துக்கொள்ளலாம்.