சனீஸ்வர பகவானின் அருளைப் பெற இதை செய்தால் போதும்!
நவகிரகங்களில் ஈஸ்வரப் பட்டம் பெற்றவர் சனீஸ்வரர் மட்டும்தான். சனீஸ்வரன் நீதிதேவன் ஆவார். தர்மவானும் கூட. கடவுள் - மனிதன், உயர்ந்தவன் - தாழ்ந்தவன் என ஏற்றத்தாழ்வு எதையும் பார்க்காமல், அவர்களின் செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தருபவர் சனீஸ்வரன். அவருடைய பார்வையில் இருந்து யாருக்கும் விலக்கு இல்லை என்றே கூறலாம்.
சனீஸ்வர பகவான் கர்மாவை நம்புகிறவர். நமது முந்தைய பிறப்பில் நாம் செய்த நல்லது கெட்டதுகள் அடிப்படையில் நடுநிலையோடு நமக்கு பலன்களை, தண்டனைகளை அளிப்பவர். நமக்கு சனீஸ்வர பகவான் கெடுதல் கொடுப்பது இல்லை. நாம் செய்யும் பாவங்கள்தான் நமக்கு கெடுதலாக மாறுகிறது. அதே நேரத்தில் சனீஸ்வர பகவானை குளிர்விப்பது கடினமான காரியம் இல்லை.
ஏழைகளுக்கு உதவுவது, பறவைகள், விலங்குகளுக்கு உணவு வழங்குவது, அந்தணர்க்கு எள், எண்ணெய், கருப்பு நிற பசு, கருப்பு நிற ஆடை, இரும்பு உள்ளிட்டவற்றை வழங்குவது, சனீஸ்வர பகவானை குளிர்விக்கும் மந்திரத்தை தினந்தோறும் சொல்வது போன்றவற்றின் மூலம் அவரது ஆசியை பெற முடியும்.
சனீஸ்வர பகவானை நோக்கி தினமும் சொல்ல வேண்டிய மந்திரங்கள்:
சனி ஸ்தோத்திரம்:
நீலாஞ்ஜன ஸமாபாஸம்
ரவிபுத்ரம் யமாக்ரஜம்!
ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம்
தம் நமாமி சனைச்சரம்!!
சனி காயத்ரி மந்திரம்
காகத்வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி|
தந்நோ மந்த: ப்ரசோதயாத்||
சனீஸ்வர பகவானை குளிர்விக்க நீல நிற கல் கொண்ட மோதிரத்தை அணியலாம். அல்லது 15 முக ருத்ராக்ஷம் அல்லது, 7 முக ருத்ராட்சம் அல்லது 36 முகம் கொண்ட சனீஸ்வர மாலையை அணிந்துகொள்ளலாம்.
அந்தணர்களுக்கு மட்டுமின்றி சனிக்கிழமைகளில் ஏழைகளுக்கு உணவு, காலணி, உளுந்து,நல்லெண்ணெய், எள், போர்வை, இரும்பு சட்டி ஆகியவற்றை வழங்குவதன் மூலம் சனீஸ்வர பகவானின் அருளைப் பெறலாம்.
னிக்கிழமைகளில் வரும் பிரதோஷ புண்ணிய தினத்தில் , சிவாலயங்களில் வில்வ இலையால் அர்ச்சனை செய்து வழிபடுவது, அரச மரத்தை வழிபடுவது போன்றவையும் சனீஸ்வர பகவானை குளிர்விக்கும்.
சனிக் கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றி வழிபடுவதும் சனீஸ்வர பகவானின் பாதிப்பைக் குறைக்க உதவும்.
சனீஸ்வர பகவானுக்கு வெல்லம் மிகவும் பிடித்தமான இனிப்பாகும். எனவே, எள் மற்றும் வெல்லம் சேர்த்து செய்யப்பட்ட எள் உருண்டையை வைத்து வழிபாடு நடத்தலாம். திருநள்ளாறு சென்று சனீஸ்வர பகவானை வழிபட்டு வந்தால் தோஷங்கள் நீங்கும்!


