பழைய பொருட்களை எரிப்பதுதான் போகியா?

 
Bhogi

தைப் பொங்கலை வரவேற்க, நம்மைத் தயாரிக்கும் போகித் திருநாள் இன்று. இன்றைய நாளில் வீட்டில் உள்ள தேவையற்ற பொருட்களை தீயிட்டு எரிப்பது நம்முடைய வழக்கம். பயன்படாத பொருட்கள் மட்டுமல்ல... கடந்த கால கசப்பு, கெட்ட அனுபவங்கள், போட்டி, பொறாமை உள்ளிட்ட எதிர்மறை குணங்கள் அனைத்தையும் எரிக்க வேண்டும், வருகிற தைப் பொங்கல் புது வழியை வழங்க நேர்மறை எண்ணங்களை மனதில் கொண்டுவர வேண்டும் என்பது இதன் பின்னணி கருத்தாக உள்ளது.

ஒரு சிலர் தை 1ம் தேதிதான் புத்தாண்டு தினமாக இருந்திருக்க வேண்டும். அதனால்தான் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்று போகி, பொங்கலை நம் முன்னோர்கள் கொண்டாடியுள்ளனர் என்றும் கூறுகின்றனர்.

சென்னை போன்ற நகரங்களில் 15- 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை போகி மிகப்பெரிய விழாவாக கொண்டாடப்பட்டது. சிறுவர்கள் மேளம் அடித்து போகியைக் கொண்டாடியது எல்லாம் மாறிப்போய்விட்டது. அதே நேரத்தில் இன்றும் கிராமப்புறங்களில் போகி உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. போகிக்கு முந்தைய நாட்களிலேயே பழைய கிழிந்த பாய், போர்வை, முறம் போன்றவற்றை எடுத்து வைத்துவிடுவார்கள். அவற்றைப் போகி அன்று காலையில் எரித்து போகி கொண்டாடுவது வழக்கமாக இருந்தது.

இன்றைய நாளில் டயர், டியூப், ரப்பர் செருப்பு போன்றவற்றை எரிக்க வேண்டாம் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுவார்கள். போகி அன்று மட்டுமல்ல எப்போதுமே இவற்றை எரிக்காமல் இருப்பதே நல்லது.

அந்தக் காலத்தில் பழைய துணிகள், கந்தை துணி, கரித் துணி, பெண்கள் மாதவிலக்கு காலத்தில் பயன்படுத்தும் துணி போன்றவற்றையும் வீட்டில் உள்ள படுக்கை, போர்வை, துடைப்பம் போன்ற பொருட்களையும் போட்டு எரிப்பார்கள். இன்று எரிக்கப்படும் பொருட்களுக்கு பதில் புதிதாக துணி உள்ளிட்டவற்றை வாங்கவும் செய்வார்கள். இதையே பழையன கழிதலும் புதிய புகுதலும் என்று கூறுவார்கள்.

இன்றைக்கு நாகரீகம் மாறிவிட்டது. கந்தையான துணிகள் அணிபவர்கள், வைத்திருப்பவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. எனவே, எரித்தே தீர வேண்டும் என்று வீட்டில் உள்ள துணிகளை எல்லாம் எரிப்பதைத் தவிர்க்க வேண்டும். பொதுவாக கிழிந்த துணிகளை மற்றவர்களுக்கு வழங்குவது தரித்திரம் என்று கூறுவார்கள். நல்ல உடைகளை நல்ல நிலையில் இருக்கும் போது மற்றவர்களுக்கு வழங்கிவிடலாம். மற்றபடி கந்தலான, பயன்படுத்தவே முடியாது என்ற நிலையில் உள்ள துணிகளை மட்டும் எரிக்கலாம்.

போகி கொண்டாடுபவர்கள் மிகவும் பாதுகாப்புடன் கொண்டாட வேண்டும். நெருப்பு பற்ற வைப்பதற்கு முன்பே அருகில் ஒரு பக்கெட் தண்ணீரை பிடித்து வைத்துவிடுங்கள். ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். போகி கொண்டாடி முடித்ததும் நெருப்பை அப்படியே விட்டுவிட்டு செல்ல வேண்டாம். தண்ணீர் ஊற்றி நன்கு அணைத்துவிட்டுச் செல்ல வேண்டும். இதன் மூலம் போகி அனைவருக்கும் பாதுகாப்பான பண்டிகையாக இருக்கும்!