பொங்கல் வைக்க ஏற்ற நேரம் எது?

 
pongal

இன்று தை முதல் நாள். இல்லங்கள் தோறும் பொங்கல் கொண்டாடப்படும் நன்னாள். தமிழர்கள் சாதி, மத வேறுபாடு இன்றி இன்றைய நாளில் பொங்கல் கொண்டாடுவார்கள். பொங்கல் தமிழர்கள் பண்டிகை. தமிழர்களாக கருதும் ஒவ்வொருவரும் பொங்கல் கொண்டாடுவது வழக்கம். வழிபடும் முறையில் வேறுபாடு இருக்கலாமே தவிர, கொண்டாட்டத்தில் மாறுபாடு இருக்காது.

பொங்கல் என்பது அறுவடைத் திருநாள். இன்றைய நாளில் புது அரிசியை பயன்படுத்தி உழவர்கள் பொங்கல் வைத்து கொண்டாடுவார்கள். காலையில் எழுந்து குளித்து, புத்தாடை அணிந்து, சூரியன் உதிக்கும் கிழக்கு முகமாக பொங்கல் பானையை வைத்து பொங்கல் வைத்து வழிபட வேண்டும்.

வீட்டின் வாசலில் பொங்கல் வைப்பது தமிழர்களின் வழக்கம். நகர்புறங்களில் இது சாத்தியமில்லை என்றாலும் கிராமங்களில் இந்த பழக்கம் தொடர்கிறது. பொங்கல் வைக்க புது பானை வாங்குவது நல்லது. மண் பானையை வாங்கி அலங்கரிக்கலாம். அதில் மஞ்சள் கிழங்கு- இலையை கட்ட வேண்டும். பொங்கல் வைக்க நேரடியாக பானையை அடுப்பில் வைக்க வேண்டாம். முதலில், பானையில் பாலும் தண்ணீரும் விட வேண்டும். கற்பூரம் கொண்டு பொங்கல் பானைக்கு ஆரத்தி காண்பித்து அடுப்பைப் பற்ற வைக்க வேண்டும். இஷ்ட தெய்வத்தை வணங்கி பானையை அடுப்பின் மீது வைக்க வேண்டும். அதன் பிறகு அரிசி, பருப்பைப் போட்டு பொங்கல் வைக்க வேண்டும். பொங்கல் பொங்கி வரும் போது பொங்கலோ பொங்கல் என்று மகிழ்ச்சி பொங்கக் கூவிக் கொண்டாட வேண்டும்.

பிற மதத்தினர் அவரவர் கடவுளை வணங்கி பொங்கல் வைத்து, மற்றவர்களுக்கு வணங்கி மகிழ்வார்கள்.

பொங்கல் வைக்க சிறந்த நேரம் என்று தற்போது பலரும் நேரம் பார்க்க ஆரம்பித்துவிட்டனர். தை 1ம் தேதி காலை 7.30 மணி முதல் 9 மணிக்குள் பொங்கல் வைக்கலாம் என்று ஜோதிடர்கள் நேரம் குறித்துள்ளனர். காலையில் பொங்கல் வைக்க முடியாதவர்கள் மாலை 4.30 மணி முதல் 6.30க்குள் பொங்கல் வைக்கலாம்.

மாட்டுப் பொங்கல் சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில் காலை 7.30 முதல் 9, 10.30 முதல் பகல் 12 மணி வரையிலும் பொங்கல் வைக்கலாம்.

காணும் பொங்கலன்று காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் அல்லது காலை 10.30 முதல் 12 மணிக்குள் பொங்கல் வைக்கலாம்.