திருப்பதி ஏழுமலையான் கோயில்: டிசம்பர் மாதத்திற்கான இலவச தரிசன டிக்கெட் நாளை வெளியீடு..

 
திருப்பதி கோவில்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் டிசம்பர் மாதத்திற்கான முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச தரிசன டிக்கெட் நாளை வெளியிடப்படுகிறது.  
 
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஒவ்வொரு மாதமும் பக்தர்களுக்கு ஸ்பெஷல் தரிசன டிக்கெட்டுகள் ,  முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்தவகையில் டிசம்பர் மாதத்திற்கான  ரூ.300 ஸ்பெஷல்  தரிசன டிக்கெட்டுகள்  கடந்த 11ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது.  தரிசன டிக்கெட்டை  பதிவு செய்து  டோக்கன் பெறும் பக்தர்களுக்கு  தங்கும் அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு , அதற்கான பட்டியல் பின்னர்  ஆன்லைனில் வெளியிடப்படும்  என்று கூறப்பட்டுள்ளது.
  திருப்பதி

அதனைத்தொடர்ந்து முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க டிசம்பர் மாதத்திற்கான இலவச சிறப்பு தரிசன டிக்கெட் நாளை (24.11.22 -  வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை  முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்கள்  ஆன்லைனில் முன்பதிவு செய்து பயன்பெற்றுக் கொள்ளுமாறு திருமலை, திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.

தரிசன டிக்கெட் மற்றும் தங்கும் அறைகளுக்கு  https://thirupatibalaji.ap.gov.in/#/login என்கிற தேவஸ்தான இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்றும் கூறியிருக்கிறது. டிக்கெட் முன்பதிவு செய்யும் பக்தர்கள், எந்த தேதிகளில் தரிசனம் மேற்கொள்ளலாம் என திருப்பதி தேவஸ்தானம் அறிவிக்கிறதோ, குறிப்பிட்ட அந்த நாட்களில் தரிசனம் செய்துகொள்ளலாம்..