சபரிமலையில் மண்டல பூஜைக்காக இன்று நடை திறப்பு .. குவியும் பக்தர்கள்..

 
sabari

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட உள்ள நிலையில், அதிகாலை முதலே பக்தர்கள் குவியத் தொடங்கியுள்ளனர்.

கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் பொதுவாகவே   மண்டல பூஜை  மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவர். அந்தவகையில் இந்த ஆண்டு,  நாளை ( நவம்பர் 17)  முதல் டிசம்பர் 27-ம் தேதி வரை சபரிமலை கோயிலில் மண்டல திருவிழா காலம் ஆகும்.  இதற்காக நேற்று (  15ம் தேதி)  மாலை நடை திறக்கப்பட்டது. இதனையடுத்து  இன்று மாலை ( நவம்பர் 16ம் தேதி) 5 மணி  முதல் மகரவிளக்கு யாத்திரை தொடங்குவதால்,  இன்று முதல்  பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட இருக்கின்றனர்.  

சபரிமலை

இந்த மண்டல திருவிழாக் காலங்களில் பக்தர்கள் மாலையணிந்து, விரதமிருந்து, இருமுடி கட்டி சுவாமி  ஐயப்பனை தரிசிக்க சபரிமலைக்கு வருவர்.. அந்தவகையில் அதிகாலை முதலே பக்தர்கள் சபரிமலைக்கு குவியத் தொடங்கியுள்ளனர். தமிழகத்திலிருந்து வந்த பெரும்பாலானோர், பம்பை கணபதி கோவிலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  மதியம் 1 மணியளவில் அவர்களை தரிசனத்திற்கு அனுப்ப அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.  

சபரிமலை ஐயப்பன் கோயில்

இந்நிலையில்,   டிசம்பர் 27ம் தேதி  மண்டல பூஜை நிறைவடைந்தும்  நடை  அடைக்கப்படும். இதற்கான முன்பதிவு கடந்த மாதம் 8 ஆம் தேதி முதல் நடைபெற்று வரும்  நிலையில்  சபரிமலையில் தரிசனம் செய்ய ஆன்லைன் பதிவு கட்டாயம் என திருவிதாங்கோடு தேவசம்போர்டு  தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.  முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்களுக்காக  நிலக்கல்லில் 10 முன்பதிவு மையங்களும்,  மாநில எல்லையில் 15 இடங்களில் புக்கிங் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.  இந்த ஆண்டு 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.