சபரிமலையில் நாளை மகர ஜோதி.. பொன்னம்பல மேட்டில் களைகட்டும் ஏற்பாடுகள்..

 
சபரிமலையில்  நாளை மகர ஜோதி.. பொன்னம்பல மேட்டில் களைகட்டும் ஏற்பாடுகள்.. 


சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை மகர ஜோதி தரிசனத்தையொட்டி,  பொன்னம்பல மேட்டில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில்,  மகர விளக்கு திருவிழா நடைபெற்று வருகிறது.  முன்னதாக கார்த்திகை மாதத்தில் மண்டல பூஜை நடைபெற்ற நிலையில் கடந்த மாதம் 27ம் தேதி கோயில் நடை சாத்தப்பட்டது.  பின்னர் மீண்டும் மகர விளக்கு பூஜைக்காக  டிசம்பர் 31ம் தேதி நடை திறக்கப்பட்டு, தொடர்ந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மகர விளக்கு திருவிழாவின்போது ஐயப்பன் சபரிமலை பொன்னம்பல மேட்டில் ஜோதி வடிவில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். அந்தவகையில் இந்த ஆண்டு  மகர ஜோதி நிகழ்வானது  நாளை மாலை நடக்க இருக்கிறது. அப்போது ஐயப்பன் சபரிமலை பொன்னம்பல மேட்டில் ஜோதி வடிவாய் காட்சி அளிப்பார்.

சபரிமலை ஐயப்பன் கோயில்

அப்போது பக்தர்கள் விண்ணை பிளக்கும் அளவிற்கு, சரண கோஷம் எழுப்புவர். மகர ஜோதியை ஒட்டி கடந்த 2  நாட்களாகவே சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இருமுடிக்கட்டி கோவிலுக்கு வரும் பக்தர்கள்  மகர ஜோதியை தரிசிக்க காட்டுப்பகுதியில் முகாமிட்டு தங்கி உள்ளனர். நாளை ஜோதி தரிசனம் முடிந்த பின்னரே அவர்கள் மலை இறங்குவார்கள் என்று கூறப்படுகிறது.   இதனால் சன்னிதானத்திலும், காட்டு பகுதிகளிலும் பக்தர்கள் கூட்டம் கட்டுகடங்காமல் உள்ளது. ஏற்கனவே சபரிமலையில் ஏராளமான பக்தர்கள் தங்கி உள்ளதால், நாளை சபரிமலை செல்லும் பக்தர்களுக்கென  பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  அந்தவகையில் சபரிமலை செல்லும் பக்தர்கள் நாளை பகல் நேரத்தில்  சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

சபரிமலை

மகரஜோதியை ஒட்டி,  சன்னிதானம் மற்றும் பொன்னம்பலமேடு பகுதிகளில் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  இதற்கிடையே மகர ஜோதி தினத்தில் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க திருவாபரணங்கள் , சன்னிதானத்திற்கு ஊர்வலமாக கொண்டு வரப்படும். அந்த ஆபரணங்கள் எடுத்து வரப்படும்  பெட்டிக்கு பக்தர்கள் பல இடங்களில் வரவேற்பு அளித்தனர். மகர ஜோதியன்று ஐயப்பன் பொன்னம்பல மேட்டில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அதேநேரம், சன்னிதானத்தில் ஐயப்பன் திருவாபரணம் அணிந்து காட்சி தருவார்.  இந்த இரு நிகழ்வுகளையும் காண  பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.