இயற்கைக்கு மாறான இந்த மகா விகாஸ் அகாடி அரசாங்கம் நீண்ட நாள் நீடிக்காது.. தேவேந்திர பட்னாவிஸ்

 

இயற்கைக்கு மாறான இந்த மகா விகாஸ் அகாடி அரசாங்கம் நீண்ட நாள் நீடிக்காது.. தேவேந்திர பட்னாவிஸ்

மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான இயற்கைக்கு மாறான இந்த மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசாங்கம் நீண்ட நாள் நீடிக்காது என்று தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. மற்றும் சிவ சேனா கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தன. அந்த தேர்தலில் பா.ஜ.க.-சிவ சேனா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. அந்த கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்த்த வேளையில், சிவ சேனா ஆட்சியில் பங்கு (2.5 ஆண்டுகள்) கேட்டது. இதனால் பா.ஜ.க.-சிவ சேனா கூட்டணி முறிந்தது. இதனை தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவாருடன் இணைந்து அந்த ஆண்டு நவம்பர் 23ம் தேதியன்று பா.ஜ.க. ஆட்சி அமைத்தது.

இயற்கைக்கு மாறான இந்த மகா விகாஸ் அகாடி அரசாங்கம் நீண்ட நாள் நீடிக்காது.. தேவேந்திர பட்னாவிஸ்
தேவேந்திர பட்னாவிஸ்

ஆனால் அந்த ஆட்சி 80 மணி நேரத்தில் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து சிவ சேனா தனது பரம எதிரியான காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்தது. இந்த கட்சிகள் அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணி கடந்த ஆண்டு நவம்பர் 28ம் தேதியன்று மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்து. சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்றார். மகா விகாஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்து நாளையோடு ஒராண்டு நிறைவடைய உள்ளது. இந்த சூழ்நிலையில் உத்தவ் தாக்கரே அரசு நீண்ட நாள் நீடிக்காது என்று முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

இயற்கைக்கு மாறான இந்த மகா விகாஸ் அகாடி அரசாங்கம் நீண்ட நாள் நீடிக்காது.. தேவேந்திர பட்னாவிஸ்
முதல்வர் உத்தவ் தாக்கரே

பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ் இது தொடர்பாக கூறுகையில், அரசு கவிழ்வதற்காக காத்திருக்கவில்லை. ஒரு திறமையான எதிர்கட்சியாக செயல்பட தயாராக உள்ளோம். ஆனால் இயற்கைக்கு மாறான இந்த அரசாங்கம் நீண்ட காலம் நீடிக்க முடியாது. வரலாற்று ரீதியாக இத்தகைய அரசாங்கங்கள் ஒரு போதும் 4-5 ஆண்டுகள் நீடித்தது இல்லை. அவர்கள் விரும்பும் வரை அரசாங்கத்தை நடத்தட்டும். அது கவிழும் நாளில் நாங்கள் மாற்று அரசாங்கத்தை வழங்குவோம். இந்த அரசாங்கம் ஒராண்டு நிறைவு செய்ய உள்ளது ஆனால் இதுவரை எந்த சாதனையும் நாம் பார்க்கவில்லை. தனது ஒராண்டு ஆட்சியில் பல வாக்குறுதிகளை அளித்துள்ளது. ஆனால் அவற்றில் எதையும் நிறைவேற்றவில்லை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரண தொகை அவர்களுக்கு வழங்கப்படவில்லை என தெரிவித்தார்.