ஐபிஎல்: கடைசி ஓவரில் டெல்லி அணி த்ரில் வெற்றி! தோல்வியை தழுவியது சிஎஸ்கே

 

ஐபிஎல்: கடைசி ஓவரில் டெல்லி அணி த்ரில் வெற்றி! தோல்வியை தழுவியது சிஎஸ்கே

ஐபிஎல் கிரிக்கெட்டின் 34வது ஆட்டத்தில் , தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிடல் அணியும் மோதின. சார்ஜா மைதானம் சிறியது என்பதால் இங்கு ரன் மழைக்கு பஞ்சம் இருக்காது. இங்கு முதலில் பேட்டிங் செய்வது சாதகமானது என்பதால் ஆட்டத்தில் ‘டாஸ்’ வென்ற சென்னை கேப்டன் தோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். சென்னை அணியில் ஒரே ஒரு மாற்றமாக பியூஸ் சாவ்லாக்கு பதிலாக கேதர் ஜாதவ் சேர்க்கப்பட்டார். சென்னை அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக பாப் டு ப்ளஸி மற்றும் சாம் கரன் களம் இறங்கினர். கடந்தமுறை அதிரடி துவக்கம் தந்த சாம் கரன் , இம்முறை ஆட்டத்தின் மூன்றாவது பந்தில் டக் அவுட் ஆகி வெளியேறினார். அதன்பிறகு வந்த ஷேன் வாட்சன் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நிதானமாக ஆடிய பாப் டு ப்ளஸி 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் மகேந்திர சிங் தோனி 3 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இறுதிகட்டத்தில் ராயுடு மற்றும் ஜடேஜா அதிரடியாக ஆடி ரன்களை மளமளவென உயர்த்தினர். ஜடேஜா 33 ரன்களும் , ராயுடு 45 ரன்களும் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20 ஓவர் முடிவில் சென்னை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்களை எட்டியது.

ஐபிஎல்: கடைசி ஓவரில் டெல்லி அணி த்ரில் வெற்றி! தோல்வியை தழுவியது சிஎஸ்கே

பின்னர் 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் சார்பில் பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். கடந்த போட்டியில் டக் அவுட் ஆன பிரித்வி ஷா , இம்முறையும் டக் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த ரகானே 8 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒருபுறம் விக்கெட்டுகள் சரிய மறுபுறம் ஷிகர் தவான் அதிரடியாக சதம் அடித்தார். கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அக்ஷர் பட்டேல் 3 சிக்சர்கள் விளாசி டெல்லி அணியை வெற்றிபெற வைத்தார். தவான் 101 ரன்களுடன் , அக்ஷர் பட்டேல் 21 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். டெல்லி அணி 1 பந்து மீதம் வைத்து 185 ரன்களை எட்டியது. இதன் மூலம் டெல்லி அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது