"சமைக்காம எப்ப பார்த்தாலும் ரீல்ஸ்”- மனைவியை கொன்றுவிட்டு கணவனும் தற்கொலை

 
s

பெங்களூருவில் 38 வயதான ஆட்டோ ஓட்டுநர் தனது மனைவியைக் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

படம்

விபூதிராவை சேர்ந்தவர் 38 வயதான ஆட்டோ ஓட்டுநர் ராகவேந்திரா. அவரது 30 வயது மனைவி ஸ்ருதி. இவர் வீட்டு பணிப்பெண்ணாக வேலை செய்துவருகிறார். தாவணகெரேயைப் பூர்வீகமாகக் கொண்ட இந்தத் தம்பதியினர், 17 ஆண்டுகளுக்கு முன்பு தங்கள் பெற்றோரைச் சம்மதிக்க வைத்து காதலித்துத் திருமணம் செய்துகொண்டனர். அவர்கள் விபூதிபுராவில் ஒரு வீடு வாங்கி அங்கே குடியேறினர். அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். அவர்கள் தாவணகெரேயில் உள்ள ஸ்ருதியின் பெற்றோர் வீட்டில் வளர்கிறார்கள்.

இந்நிலையில் தனது மனைவி தனக்கு உணவு சமைப்பதில்லை என்றும், கைபேசியில் மூழ்கி கிடப்பதாகவும், ரீல்ஸ் பார்ப்பதாகவும் ராகவேந்திரா அடிக்கடி புகார் கூறி வந்தார். ஸ்ருதியும் தனது கணவர் குடிப்பதாகக் குற்றம் சாட்டியிருந்தார். சமீபத்தில், அவர்களுக்கிடையேயான வாக்குவாதம் முற்றியதால், அவர்கள் காவல் நிலையத்திற்குச் சென்றனர். காவல்துறையினர் அவர்களுக்கு அறிவுரை கூறி திருப்பி அனுப்பினர். சம்பவம் நடந்த கடந்த செவ்வாய்க்கிழமையன்று இரவு, ராகவேந்திரா வீட்டிற்கு வந்தபோது, ​​ஸ்ருதி கைபேசியில் மூழ்கியிருப்பதைக் கண்டு கோபமடைந்தார். இதனால் இருவருக்குமிடையே சண்டை மூண்டது. இருவருக்குமான சண்டை தீவிரமடைந்த நிலையில், ராகவேந்திரா ஸ்ருதியை பீர் பாட்டிலால் குத்திக் கொன்றார். மது போதையில் இருந்த ராகவேந்திரா, பின்னர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.