வேறு சமூக பெண்ணை காதலித்த தலித் இளைஞர் மர்ம மரணம்

மதுரை கள்ளிக்குடி அருகே உள்ள வேப்பங்குளத்தைச் சேர்ந்த லிங்குசாமி முத்து என்பவர் மகனான காளையன் (23) அதே பகுதியைச் சேர்ந்த வேறொரு சமூகத்தைச் சார்ந்த பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகின்றது.
கடந்த ஜன.8 ஆம் தேதி பெண் வீட்டைச் சேர்ந்த சிலர் காளையன் வீட்டில் புகுந்து சரமாரியாக தாக்கிய சிசிடிவி கேமரா வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வந்தது. இதனைத் தொடர்ந்து மறுநாள் கள்ளிக்குடி காவல் நிலையம் சென்று சமரச பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதனிடையே கடந்த 13 ஆம் தேதி வீட்டிலிருந்த காளையன் வெளியில் சென்ற போது வீடு திரும்பவில்லை என்று கூறப்படும் நிலையில் 15ஆம் தேதி அருகில் உள்ள குளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக மதுரை மாவட்டம் கள்ளிக்குடி காவல்துறையினர் சந்தேக மரணம் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் காளையன் கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறி உயிரிழந்த காளையனின் உடலை வாங்க மறுத்தும் சந்தேக மரண வழக்கை எஸ்.சி எஸ்.டி பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் போராட்டம் நடத்தினர்.