'இதுக்கெல்லாமா கொலை பண்ணுவாங்க?’... திண்டுக்கல் அருகே இளைஞர் ஓட ஓட வெட்டி படுகொலை

 
murder

திண்டுக்கல் அருகே இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.

murder


திண்டுக்கல் வன்னியபாறைப்பட்டியை சேர்ந்தவர் முனியப்பன். இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரது மகன் நாகராஜ் (வயது 27) இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் நிதி நிறுவனம் (கந்து வட்டி தொழில்) செய்து வரும் வினோத் என்பவரிடம் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 05.04.25 இரவு பெரிய கோட்டைக்கு வட்டி பணம் வசூல் செய்வதற்காக இருசக்கர வாகனத்தில் நாகராஜ் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 6 பேர் நாகராஜனை வழி மறித்துள்ளனர்.

தன்னை கொலை செய்யப் போகிறார்கள் என்பதை உணர்ந்த நாகராஜன், இருசக்கர வாகனத்தை கீழே போட்டு விட்டு அங்கிருந்து வேகமாக தப்பி ஓடினார். ஆனால் கொலை செய்யும் நோக்கத்துடன் வந்த 6 பேரும் நாகராஜனை துரத்தி சென்று ஓட ஓட விரட்டி சென்று அரிவாள், கத்தி போன்ற பயங்கரமான ஆயுதங்களால் முகம், கழுத்து, மார்பு, கை, கால் என பல இடங்களில் வெட்டி படுகொலை செய்தனர். கொலை தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திண்டுக்கல் தாலுக்கா போலீசார் நாகராஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில்  பதிவான காட்சிகளை போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில் நாகராஜ் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் திண்டுக்கல் அருகே உள்ள  கோவிலூர் பகுதியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார்  குளிப்பட்டியை சேர்ந்த மகேந்திரன் (வயது 21), மாதவன் (23), கிரி (21 ), சுகுமார் (24), விக்னேஸ்வரன் (23), குளிபட்டியைச் சேர்ந்த விஜய் (23) ஆகிய 6 பேரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் A 1 கொலை குற்றவாளியான குழந்தைபட்டியைச் சேர்ந்த மகேந்திரன், கொலை செய்யப்பட்ட நாகராஜன் பணி புரியும் நிதி நிறுவனத்தில் வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார். கடன் வசூலிக்க நாகராஜ் சென்ற இடத்தில் மகேந்திரனுக்கும் நாகராஜுக்கும் இடையே வாக்குவாதம் முற்றி பெரும் தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த மகேந்திரன் அவரை கொலை செய்ய திட்டமிட்டதாகவும் அதன்படி, மகேந்திரன் உள்ளிட்ட 6 பேரும் குளிப்பட்டி அருகே நாகராஜ் வருகைக்காக காத்திருந்தனர். அந்த  வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த நாகராஜனை ஓட ஓட விட விரட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடியதாக தெரிவித்தனர். மேலும் கொலைக்கு பயன்படுத்திய  கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

murder

இந்த நிதி நிறுவன உரிமையாளர்  வினோத் ஏற்கனவே 6 மாதத்திற்கு முன்பு கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் ஹேமதயாளவர்மன் என்பவரை கொலை செய்து குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.