வீடு புகுந்து பெண் கழுத்தறுத்து கொலை! தென்காசியில் பரபரப்பு

 
murder murder

பாவூர்சத்திரம் அருகே வீடு புகுந்து பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில், கொலையாளியை போலீசார் தேடிவருகின்றனர்.

murder


தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள பனையடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பரமசிவன். பாவூர்சத்திரத்தில் - கடையம் சாலையில் சலூன் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி உமா (37). தம்பதிக்கு இரு மகன்களும் உள்ளனர். பரமசிவன் அதிகாலையில் அப்பகுதியில் உள்ள கடைக்கு டீ குடிக்க சென்றதாக கூறப்படுகிறது. அவரது இரு மகன்களும் வீட்டின் மாடியில் உள்ள அறையிலும் உமா, வீட்டின் ஹாலிலும் தூங்கி உள்ளனர். அப்போது கத்தியுடன் வீட்டினுள் புகுந்த மர்ம நபர் ஆடு அறுக்கும் கத்தியால் உமாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளார். வெளியே சென்ற பரமசிவன் வீட்டிற்கு வந்து பார்த்த போது உமா ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். 

தகவல் அறிந்து வந்த பாவூர்சத்திரம் போலீசார் உமாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆலங்குளம் டிஎஸ்பி கிளாட்சன் ஜோஸ் மற்றும் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். கொலையாளி கொலை செய்ய பயன்படுத்திய கத்தியை வீட்டிலிருந்து சிறு தூரத்தில் இருந்த கிணற்றுக்குள் போட்டு சென்றதாகவும் அதனை போலீசார் கைப்பற்றியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் கொலையாளியை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.