தாயை தீவைத்து கொளுத்திய மகன்!
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள உதம்பூரில் தாயை தீவைத்து கொளுத்திய மகனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உதம்பூர் ஹவுசிங் காலனியைச் சேர்ந்த கேசவ் வர்மாவின் மனைவி சுஷ்மா தேவி. இந்த தம்பதியின் வளர்ப்பு மகன் மோக்ஷ் வர்மா. இந்நிலையில் மோக்ஷ் வர்மா, தனது தாயின் மீது டீசல் ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பான அதிர்ச்சியூட்டும் காட்சிகளும் வெளியாகியுள்ளன. அந்தக் காணொளிக் காட்சியில், அப்பெண் தீப்பிழம்புகளால் சூழப்பட்டு, உதவி கேட்டு அலறிக்கொண்டு வீட்டை விட்டு வெளியேற முயற்சிப்பதையும், அக்கம்பக்கத்தினர் அவருக்கு உதவ விரைந்து வந்து தீயை அணைக்க முயற்சிப்பதையும் காணலாம். குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு உதம்பூர் மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். முதற்கட்ட சிகிச்சைக்குப் பிறகு, அவரது கவலைக்கிடமான நிலையைக் கருத்தில் கொண்டு மருத்துவர்கள் அவரை ஜம்மு அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, நேற்று இரவு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கிடையில், உதம்பூர் காவல்துறையினர் மோக்ஷ் வர்மாவை கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

