கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ மனைவி போட்ட மாஸ்டர் பிளான்! துடிதுடித்து உயிரிழந்த கணவன்
கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ கணவனை சினிமா பாணியில் திட்டமிட்டு கொலை செய்த மனைவி சிசிடிவி மூலம் போலீசில் வசமாக சிக்கினார்.
ஆந்திர பிரதேசம் மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ல்லப்பகொண்டா மலைக்கோவிலுக்குச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் காட்டில் பிணமாக கிடப்பதாக தகவல் வந்ததை அடுத்து போலீசார் அங்கு சென்று சடலத்தை மீட்டனர். விசாரணையில் இறந்தவர் கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பது தெரியவந்தது. 24 வயதான ரமேஷ்க்கும், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சாந்திபுரம் மண்டலத்தைச் சேர்ந்த ஹாசினி என்பருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு வயதில் குழந்தையும் உள்ளது.
இந்நிலையில் கடந்த ஜூலை 13ஆம் தேதி இரவு ரமேஷ் தனது மனைவி ஹாசினியின் சொந்த ஊரான சாந்திபுரம் அடுத்த போயனப்பள்ளி கிராமத்திற்குத் தனது குடும்பத்துடன் சென்றுள்ளார். பின்னர் ஆந்திரா-தமிழக எல்லையிலுள்ள குப்பம் நகரின் ஒதுக்குப்புறமான காட்டுப் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற சிவபெருமானின் ‘மல்லப்பகொண்டா’ மலைக்கோவிலுக்குச் செல்ல அவர்கள் திட்டமிட்டுள்ளனர். ஜூலை 14ஆம் தேதியன்று, ரமேஷ் அவரது மனைவி மற்றும் ஒரு வயதுக் குழந்தையுடன் மலைக்கோவிலுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். அப்போது அவர்களை ஹாசினியின் 22 வயது கள்ளக்காதலன் உள்ளிட்ட 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்துள்ளது. அவர்கள் ரமேஷை வலுக்கட்டாயமாக காட்டுப்பகுதிக்குள் அழைத்து சென்று அடித்து கொலை செய்து அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். சம்பவத்திற்குப் பிறகு ரமேஷின் மனைவி ஹாசினி மற்றும் அவரது குழந்தையும் மாயமாகினர். நீண்ட நேரமாகியும் ரமேஷ் வராததால், ரமேஷ் குடும்பத்தினர் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த உறவினர்கள், குப்பம் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். இதனிடையே அடுத்தநாள் காலை காட்டுப் பாதையில் ரமேஷின் உடல் இருப்பதாக தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். இதனையடுத்து போலீசார் மலை அடிவாரத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், கணவர் கொலை செய்யப்பட்ட சில நிமிடங்களிலேயே, மனைவி ஹாசினி தனது ஒரு வயதுக் குழந்தையுடன் கள்ளக்காதலன் மற்றும் அவனது நண்பர்களின் பைக்கில் ஏறி தப்பி சென்றது பதிவாகி இருந்தது. கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழவே ரமேஷை ஹாசினி சினிமா பாணியில் திட்டமிட்டு வரவழைத்துக் கொலை செய்தது உறுதியானதை அடுத்து அவர்களைதேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

